Published : 04 Nov 2025 07:04 AM
Last Updated : 04 Nov 2025 07:04 AM
திமுகவில் இருப்பவர்களை குறி வைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது. அதற்கு நான் முதல் பலியாகி விட்டேன் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
திருவாரூர் மாவட்ட திமுக சார்பில், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பாக நிலை முகவர்களுக்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் முதன்மைச் செயலாளரும், திருச்சி மண்டல பொறுப்பாளருமான அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது: வாக்காளர் பட்டியல் வேலையை நாம் சரியாக செய்துவிட்டால், நமக்கு பாதி வெற்றி உறுதியாகிவிடும். திமுக கூட்டணியில் இருப்பவர்கள் வெளியே சென்றுவிடுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறினார். ஆனால், நமது கூட்டணியில் இருந்து இதுவரை யாரும் வெளியே செல்லவில்லை.
ஆனால் அவருடன் இருப்பவர்களில், பாமக இரண்டாக பிரிந்து விட்டது. தேமுதிக வெளியேறிவிட்டது. சசிகலா, டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் என அதிமுக செதில், செதிலாக பிரிந்து கிடக்கிறது. நாம் அப்படியேதான் ஒற்றுமையாக இருக்கிறோம். தலைவர் ஸ்டாலினை இரண்டாவது முறையாக முதல்வராக, ஆட்சிக் கட்டிலில் அமரவைப்பதுதான் நமது கடமை.திமுகவில் இருக்கும் ஒவ்வொருவரையும் குறி வைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது. அதற்கு முதல் பலி நானாகி விட்டேன். எது வந்தாலும் நிற்போம்; அதில் எந்த மாற்றமும் இல்லை. அடிக்க அடிக்க பந்து மாதிரி எழுந்திருக்க வேண்டுமே தவிர, விட்டு விட்டு போகக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT