Published : 04 Nov 2025 06:41 AM
Last Updated : 04 Nov 2025 06:41 AM
கரூர்: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தவெக அலுவலகம் அமைந்துள்ள பனையூருக்கு சிபிஐ அதிகாரிகள் 3 பேர் நேற்று சென்றனர். அப்போது பிரச்சார வாகன கேமரா பதிவுகளைக் கேட்டு சம்மன் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகள், நேரடி சாட்சிகள், பல்வேறு துறை அதிகாரிகள் என இதுவரை மொத்தம் 306 பேருக்கு சம்மன் அனுப்பி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் வேலுசாமிபுரத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, கரூர் சுற்றுலா மாளிகையில் நேற்று 2-வது நாளாக வேலுசாமிபுரத்தில் பேக்கரி வைத்திருப்பவர், கேட்டரிங் கல்லூரி வைத்திருப்பவர் உள்ளிட்ட சம்மன் அனுப்பப்பட்ட 10-க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-1 மாஜிஸ்திரேட் பரத்குமாரை சிபிஐ அதிகாரிகள் சந்தித்தனர். 3 பேர் அடங்கிய குழு கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள், ஆதவ் அர்ஜுனாவின் ‘வாய்ஸ் ஆஃப் காமன்’ அமைப்பில் பணியாற்றி வரும், கரூர் காமராஜபுரம் என்ற முகவரியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரிடம் விசாரணை நடத்த நேற்று முன்தினம் சென்றனர்.
அப்போது, அவர் சென்னையில் இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் சிபிஐ இன்ஸ்பெக்டர் பெனிக் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் சென்னை புறப்பட்டுச் சென்றனர்.
சென்னை பனையூரில் உள்ள தவெகவின் அலுவலகத்துக்கு நேற்று சென்ற சிபிஐ அதிகாரிகள், விஜய்யின் பிரச்சார வாகனத்தில் உள்ள கேமரா பதிவுகள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் விவரங்களை அளிக்குமாறு இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமாரிடம் கேட்டு சம்மன் கொடுத்ததாகவும், அவற்றை 3 நாட்களில் அளிப்பதாக அவர் கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், ராம்குமார் எங்கு உள்ளார் என்ற விவரத்தையும் அவரிடம் கேட்டதாகத் தெரிகிறது. நிர்மல்குமார் அளித்த தகவலின் அடிப்படையில் ராம்குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT