Published : 03 Nov 2025 03:30 PM
Last Updated : 03 Nov 2025 03:30 PM

எஸ்ஐஆர் பணிகள் குறித்து அச்சம் தேவையில்லை: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. இப்பணிகள் எதிர்ப்பார்த்தைவிட சிறப்பாக மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

சென்னை தியாகராய நகர், தாம்பரம் தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், தகுதியற்றவர்கள் மற்றும் இரட்டை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, தி.நகர் முன்னாள் எம்எல்ஏ சத்தியநாரணயன் மற்றும் தாம்பரம் தொகுதியைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் விநாயகம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான நிரஞ்சன் ராஜகோபால், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் நடைபெறும் என்றும், ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வாக்காளர் சிறப்பு திருத்தப்பணிகள் நடைபெறும் என்றும் குறிப்பிட்டார்.

தற்போது தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அக்டோபர் 27 ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், நாளை முதல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

இப்பணிகள் முழுமையான வாக்காளர் பட்டியலை மாற்றியமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். ஒவ்வொரு வாக்காளருக்கும் படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்த படிவங்களை சரிபார்த்து டிசம்பர் மாதம் 9-ம் தேதி சிறப்பு தீவிர திருத்த பணிகள் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போது வரைவு பட்டியலுக்கு ஆட்சேபம் தெரிவிக்கலாம் என்றும் அதை முழுமையாக பரிசீலித்த பிறகே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார்.

1950-ம் ஆண்டுக்கு பிறகு 10 முறை சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் 2005-ம் ஆண்டிற்கு பின் 20 ஆண்டுகளுக்கு பின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. இப்பணிகள் எதிர்ப்பார்த்ததைவிட சிறப்பாக மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதுபோல கரூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்களை நீக்கக் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

இந்த வாதங்களை பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நவம்பர் 13 ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x