Published : 03 Nov 2025 06:22 AM
Last Updated : 03 Nov 2025 06:22 AM
ஆதம்பாக்கம்: சென்னை வெளிவட்ட சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், ஆதம்பாக்கம் பாலாஜி நகர் பகுதியில் சென்டர் மீடியனை அகற்றி, சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டு வரகுடியிருப்போர் நலச் சங்க நிர் வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். புதிய சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டுவர விடாமல் தடுப்பது நெடுஞ்சாலைத் துறையா, போக்குவரத்து போலீஸாரா என்பது தெரியாமல் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஜிஎஸ்டி. சாலை, வேளச்சேரி பிரதான சாலை ஆகிய முக்கிய சாலைகளை இணைக்கும் பிரதான சாலையாக, சென்னை வெளிவட்ட சாலை (MRTS Road) உள்ளது. இந்த சாலை, உள்ளகரம், புழுதிவாக்கம், வாணுவம் பேட்டை, ஆலந்தூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
தொடர்ச்சியாக, 24 மணி நேரமும் போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில், ஆதம்பாக்கம் பாலாஜி நகரில் இருந்து வெளிவரும் வாகனங்கள் மற்றும் புழுதிவாக்கம் பாலாஜி நகர் சென்று வரவும், பாதசாரிகள் பயமின்றி பாதுகாப்பாக சாலையை கடப்பதற்கும், விபத்துகளை தடுப்பதற்கும் இந்த பகுதியில் சிக்னல் அமைக்க வேண்டும், சென்டர் மீடியனை அகற்ற வேண்டுமென கோரிக்கை உள்ளது. பள்ளிகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சாலையை கடக்க பெரிதும் அவதிப்படுகின்றனர்.
இது தொடர்பாக உள்ளகரம்-புழுதிவாக்கம் குடியிருப்போர் நலச் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில், மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறைக்கு கோரிக்கை மனு அளித்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட இடத்தில் சிக்னல் அமைக்கவும், சென்டர் மீடியனை அகற்றவும் முடிவு செய்யப்பட்டு சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனால், தினம், தினம் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன், பொருளாதார இழப்புக்கும் ஆளாகின்றனர்.
இதை காவல்துறையும், நெடுஞ்சாலைத்துறையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என, குடியிருப்போர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். சென்டர் மீடியனை அகற்ற போலீஸார் கடிதம் அளித்தனர். அதன் பேரில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சென்டர் மீடியனை அகற்ற முடிவுசெய்யப்பட்டது. பணிகள் தொடங்க இருந்த நிலையில், போலீஸார் தற்போது அங்கு சென்டர் மீடியனை அகற்ற வேண்டாம் என கூறிவிட்டனர். நாங்கள் எதையும் தடுக்கவில்லை என நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, “ஏற்கெனவே பாலாஜி நகரில் மற்றொரு சிக்னல் இருப்பதால், இரண்டு சிக்னலும் ஒரே நேரத்தில் இயங்கும் போது போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், தற்காலிகமாக சென்டர் மீடியனை அகற்றும்நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT