Published : 03 Nov 2025 07:11 AM
Last Updated : 03 Nov 2025 07:11 AM
சென்னை: சென்னையில் வசிக்கும் 82 வயதான ஒருவர் ரயில்வே பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, தொடர்ந்து 25 ஆண்டுகளாக அடிப்படை ஆரம்பக் கல்விக்காக, சேவையாற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். சென்னை விருகம்பாக்கம் குமரன் நகர் 2-வது பிரதான சாலையில் வசிப்பவர் என். சுப்பிரமணியன்(82). இவரது சொந்த ஊர் ராணிப்பேட்டை மாவட்டம் வணக்கம்பாடி.
10-ம் வகுப்பு வரை படித்திருந்த இவர் ரயில்வே சர்வீஸ் ஆணையத் தேர்வில் வென்று, 1964-ல் ரயில்வே சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு துறையில் கிளார்க்-ஆக பணியில் சேர்ந்தார். அங்கு ஆங்கிலத்தின் அவசியம் மற்றும் உயர்கல்வியின் தேவையை உணர்ந்த அவர், குறுகிய காலத்தில் ஆங்கில அறிவை மேம்படுத்திக் கொண்டு, சிறப்பாகப் பணியாற்றி வந்தார்.
எனினும், அடிப்படைக் கல்வியின் முக்கியத்துவம் குறித்த எண்ணம் அவரது மனதில் ஆழமாகப் பதிந்தது. மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வியை நன்று போதிக்க வேண்டுமென்ற விருப்பம் மேலோங்கியது. இதையடுத்து, முதல்நிலை அலுவலக கண்காணிப்பாளராக பதவி வகித்தபோது, தனது 57-வது வயதில் விருப்ப ஓய்வு பெற்றார்.
அதன்பின்னர், ராணிப்பேட்டை மாவட்டம் வணக்கம்பாடி, திருவண்ணாமலை மாவட்டம் போளூர், குருவிமலை மற்றும் கீழ்பெண்ணாத்தூர், பெலாசூர், ராமபாளையம் ஆகிய ஊர்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சேவையைத் தொடங்கினார்.
மாணவர்கள் நீதிநெறி நூல், திருக்குறள், ஆங்கில அகராதி, உலக வரைப்பட புத்தகம், அறநெறிப் பாடல் அடங்கிய புத்தகம், பென்சில்-ரப்பர் போன்றவற்றை வழங்கியதுடன், பள்ளிகளுக்கு பல்வேறு கல்வி உபகரணங்களையும் வாங்கிக் கொடுத்தார். தினமும் 180 கி.மீ. முதல் 200 கி.மீ.வரை பயணித்து தொடக்கப் பள்ளிகளுக்கு சென்று வந் தார். இதுதவிர, சென்னை கோயம்பேடு, விருகம்பாக்கம், அரும்பாக்கத்தில் உள்ள 4 தொடக்கப் பள்ளிகளுக்கு சென்று கல்விச் சேவையாற்றினார்.
சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு 2013-14-ம் ஆண்டு வரை கல்விச் சேவை புரிந்த அவர், தற்போது திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூரில் உள்ள கிராமப்புற அரசு தொடக்கப் பள்ளிகளில் தீவிர கல்விச் சேவையில் ஈடுபடுகிறார். தற்போது இவரது கல்விச் சேவை 25-வது ஆண்டை எட்டியுள்ளது.
இதுவரை 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களை சந்தித்துள்ளார். ஓர் மாணவருக்கு ரூ.350 முதல் ரூ.500 வரை செலவிடுகிறார். ஒரு ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் வரை செலவிடுகிறார். தனது ஓய்வூதியத்தைக் கொண்டு கல்விச் சேவையாற்றும் இவரை மறைந்த முன்னாள் ஆளுநர் ரோசய்யா, தமிழக முன்னாள் அமைச்சர்கள், ரயில்வே உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.
100-க்கும் மேற்பட்ட விருதுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் குவித்துள்ள சுப்பிரமணியன், `இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறியதாவது: குருவிமலை, வணக்கம்பாடியில் உள்ள பள்ளிகளில் தொடர்ந்து 25 ஆண்டுகளாகவும், ராமபாளையம், பெலாசூரில் உள்ள பள்ளிகளில் 20 ஆண்டுகளாகவும் சேவைபுரிந்து வருகிறேன்.
கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், கல்வி உபகரணங்களை தொடர்ந்து வழங்குகிறோம். மேலும், ஆத்திசூடி நூல், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய புத்தகத்தையும் வழங்குகிறோம். எனது கல்விச் சேவைக்கு மனைவி மற்றும் 3 பிள் ளைகள் துணையாகஇருக் கிறார்கள். மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வி மிகவும் அவசியம். இறக்கும் வரை கல் விச்சேவையில் ஈடுபட விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT