Published : 03 Nov 2025 05:56 AM
Last Updated : 03 Nov 2025 05:56 AM
சென்னை: உயர் படிப்புகள், அரசு வேலைகளில் முன்னுரிமை சதவீதத்தை அதிகரித்து, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கை, உட்கட்டமைப்புகள் போன்றவற்றை கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (யுடிஐஎஸ்இ) ஆய்வுசெய்து, அறிக்கை வெளியிட்டுள்ளது. 2024-25-ம் ஆண்டுக்கான அறிக்கையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என ஒட்டுமொத்தமாக 9,27,185 மாணவர்கள் முதலாம் வகுப்பில் சேர்ந்துள்ளநிலையில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 3,61,940, பிற தனியார் பள்ளிகளில் 5,65,243 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
அரசு பள்ளிகளைவிட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். கரோனா காலத்தில் பலர் அரசு பள்ளிகளில் சேர்த்தனர். அதன்படி 2022-23-ல் அரசு பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்தது. அப்படி சேர்ந்த மாணவர்கள் மீண்டும் தனியார் பள்ளிகளுக்கு ஏன் சென்றனர்? அரசுப் பள்ளிகளில் போதிய கட்டிட வசதிகள், கழிப்பறை வசதிகள், பாதுகாப்பு இல்லாதது, போதுமான ஆசிரியர்கள் இல்லாமை போன்றவைதான் காரணம்.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்கள் இல்லாத பள்ளிகள், குறைவாக உள்ள பள்ளிகள், ஆசிரியர்கள் பற்றாக்குறைபள்ளிகள், பள்ளிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் குறித்து கல்வித் துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
அதனடிப்படையில், உட்கட்டமைப்புகளை ஏற்படுத்துவது, குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளிகளை ஒன்றிணைப்பது, உபரியாக உள்ள ஆசிரியர்களை பற்றாக்குறையுள்ள பள்ளிகளுக்கு மாற்றுவது போன்றவற்றை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு அனைத்து உயர் படிப்புகள் மற்றும் அரசு வேலைகளில் முன்னுரிமை சதவீதத்தை அதிகரித்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT