Published : 03 Nov 2025 06:19 AM
Last Updated : 03 Nov 2025 06:19 AM
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் 4-வது வழித்தடத்தில், போரூர் - பவர் ஹவுஸ் வரை உயர்மட்ட கட்டுமானத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு உயர்மட்டப் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித்தடம் (26.1 கி.மீ.) ஒன்றாகும். இத்தடத்தில் போரூர் - பூந்தமல்லி வரை உயர்மட்டப்பாதைபணிகள் நிறைவடைந்து, தற்போது, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
இதையடுத்து, போரூர் - பவர்ஹவுஸ் வரையிலான உயர்மட்டப் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இப்பாதையில் சில இடங்களில் மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடம் மற்றும் பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வரையிலான 4-வது வழித்தடம் ஆகிய இரு வழித்தடங்கள் சில இடங்களில் இணைகின்றன.
குறிப்பாக ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம், ஆலப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய பகுதிகளில் டபுள்டெக்கர் லைன் எனப்படும் 2 அடுக்கு உயர்மட்டப் பாதைகள் அமைக்கப்படுகின்றன. போரூர் - பவர் ஹவுஸ் வரை உயர்மட்டப் பாதை கட்டுமானத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலப் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளன.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், ரயில் பாதைக்கான கர்டர்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. போரூர் - பவர் ஹவுஸ் வரை உயர்மட்ட மெட்ரோ ரயில் பாதை கட்டுமானத்தில், 9 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 8 கி.மீ. தொலைவுக்கான உயர்மட்டப் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த கட்டமாக, இதன் மீது ரயில்பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT