Published : 03 Nov 2025 05:44 AM
Last Updated : 03 Nov 2025 05:44 AM
சென்னை: தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரல் -கோவை, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, சென்னை சென்ட்ரல் - மைசூர் வந்தே பாரத் ரயில் உட்பட 11 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மற்ற விரைவு ரயில்களை காட்டிலும் வேகமாகவும், சொகுசாகவும் இருப்பதால், இந்த வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
மேலும், பல வழித் தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க வலியுறுத்தி, ரயில்வே அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில், தென்மேற்கு ரயில்வே சார்பில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து தமிழகம் வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை நவ.7-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கர்நாடகா மாநிலம், கே.எஸ்.ஆர். பெங்களூருவில் இருந்து தமிழகம் வழியாக, கேரள மாநிலம், எர்ணாகுளத்துக்கு புதிய வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியம், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது. அதன்படி, இந்த புதிய ரயில் சேவை நவ.7-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. வாரத்தில் புதன்கிழமை தவிர, மற்ற நாட்களில் இந்த ரயில் இயக்கப்படும்.
கே.எஸ்.ஆர் பெங்களூரில் இருந்து காலை 5:10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் வழியாக மதியம் 1:50 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். மறுமார்க்கமாக, எர்ணாகுளத்தில் இருந்து பிற்பகல் 2:20 மணிக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டு, இரவு 11:00 மணிக்கு கே.எஸ்.ஆர். பெங்களூருவை அடையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT