Published : 03 Nov 2025 05:43 AM
Last Updated : 03 Nov 2025 05:43 AM
சென்னை: சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை திட்டத்தில், இதய அடைப்பு குறித்து 2 நிமிடத்தில் தெரிந்து கொள்ளும் புதிய வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளளது.
இது தொடர்பாக சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த்குமார் கூறியதாவது: ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள இந்த பன்னோக்கு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை திட்டம் 4 விதமான கட்டணத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதில், ‘பிளாட்டினம் பிளஸ்’ திட்டம் ரூ.4,000 கட்டணம் கொண்டது.
இதில், உடற்பயிற்சி செய்யும்போது இதயத்தின் செயல்பாட்டை தெரிந்துகொள்ள, ‘டிரெட்மில்’ என்ற பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த சோதனையை செய்துகொள்ள பலர் முன்வந்தாலும், உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் அனைவருக்கும் செய்ய முடிவதில்லை. இதனால், இசிஜி, எக்கோ ஆகியவற்றுடன் இதய அடைப்பை 2 நிமிடத்தில் தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ‘சிடி கால்சியம் ஸ்கோரிங்’ என்ற பரிசோதனை முறையில், ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு இருக்கிறதா என்று கண்டறிந்து, எங்கு அடைப்பு இருக்கிறது, எந்த அளவுக்கு கொழுப்பு படிந்துள்ளது என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். தனியார் மையங்களில் இந்த ஒரு பரிசோதனைக்கு மட்டுமே ரூ.4,000 வரை செலவாகும்.
முழு உடல் பரிசோதனைக்கான பிளாட்டினம் பிளஸ் திட்டத்தில், ‘டிரெட்மில்’ சோதனைக்கு பதிலாக, இந்த பரிசோதனையை செய்து கொள்ளலாம். இதில் ஊசி, மருந்து இல்லாமல் எளிய முறையில், 2 நிமிடத்தில் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும். அதேநேரம், சுயவிருப்பம் இருந்தாலும், மருத்துவமனையில் உள்ள இதய மருத்துவர்கள் பரிந்துரை செய்தால் மட்டுமே இந்த பரிசோதனை செய்யப்படும் என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT