Published : 03 Nov 2025 10:48 AM
Last Updated : 03 Nov 2025 10:48 AM
கடந்த மக்களவைத் தேர்தல் சமயத்தில் டெல்லிக்கே சென்று பாஜகவில் இணைந்தவர் அப்போது விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ-வாக இருந்த விஜயதரணி. காங்கிரஸில் இருந்த போது விவாதங்கள், மேடைகள் என பிஸியாக இருந்தவருக்கு இப்போது பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்காமல் வைத்திருக்கிறது பாஜக. ஆனாலும், “எனக்கு எப்போது எதைத் தரவேண்டும் என்பது பாஜக தலைமைக்குத் தெரியும்” என பெருத்த நம்பிக்கையுடன் காத்திருக்கும் விஜயதரணி ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டியிலிருந்து...
தமிழகத்தில் திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சிக்கு வரும் நிலையில், தேசிய கட்சியான பாஜகவில் இருந்து கொண்டு சாதிக்கமுடியும் என நினைக்கிறீர்களா?
காங்கிரஸ் தற்போது தேய்ந்து கொண்டு இருக்கிறது. கூட்டணியில் இருந்தால் மட்டுமே காங்கிரஸால் தமிழகத்தில் சாதிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம், பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. இப்போதைக்கு எங்களுக்கு கூட்டணி தேவை என்றாலும் வரும் காலங்களில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு நிச்சயம் பிரகாசமாக இருக்கும். ஏற்கெனவே நான் தேசியக் கட்சியில் இருந்தவள் தான் என்பதால் பாஜக என்கிற தேசியக் கட்சியிலும் சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
உங்களைப் போன்ற பெண்கள் அரசியலில் முன்னேற தடைகளாக இருப்பவை எவை?
பொதுவாக, அரசியல் தளத்தில் பெண்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படுவது மிகவும் குறைவாகவே இருக்கிறது. துணிந்து அரசியல் தளத்தை ஏற்றுக்கொண்டு பயணிக்க நினைக்கும் பெண்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. மக்கள் பணியாற்ற அரசியலை தேர்வு செய்யும் பெண்களுக்கு பல நேரங்களில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. சில கட்சிகள் பெண்களுக்கான மதிப்பையும் மரியாதையையும் அளித்தாலும் பெரும்பாலான கட்சிகள் பெயரளவுக்கே பெண்களை மதிக்கின்றன.
தேசியக் கட்சிகளில் பெண்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிப்பது காங்கிரஸா... பாஜகவா?
காங்கிரஸ் கட்சியில் முன்பு பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. காலப்போக்கில் தான் அதெல்லாம் இல்லாமல் போய்விட்டது. ஆனால், பாஜகவில் அதே சமகாலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் போன்றோர் எல்லாம் தலைவர்களாக இருந்தார்கள். என்னை காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி தலைவராக அனைத்து எம்எல்ஏ-க்களும் சேர்ந்து இருமுறை தேர்வு செய்தார்கள். அப்படி இருந்தும் அந்தப் பொறுப்பை எனக்கு வழங்காமல் காங்கிரஸ் தலைமை இரண்டு முறையும் நிராகரித்துவிட்டது. பெண்கள் அதிகார மையத்தில் இருக்க முடியாது என நம்புவது காங்கிரஸ். பெண்
களை தலைவர்களாகவும், அதிகார மையத்திலும் அமரவைத்து அழகு பார்ப்பது பாஜக.
பாஜக மதவாதக் கட்சி என்று மக்கள் மன்றத்தில் செய்யப்படும் பிரச்சாரத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்?
மதவாத கட்சி என்றால் எல்லா கட்சிகளும் தான் மதவாதக் கட்சி. பாஜகவை மட்டும் ஏன் சொல்கிறீர்கள்? உண்மையில் அனைத்து மதங்களுடனும் இணக்கமாக இருப்பது பாஜக தான். அதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன். பாஜகவில் அனைத்து மதத்தினரும் கட்சிப் பதவியில் இருக்கிறார்கள். சொல்லப்போனால், மதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு மனிதத்துவத்துக்கு பாஜகவில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
காங்கிரஸைப் போலவே பாஜகவிலும் கோஷ்டிகள் இருப்பதாக உணர்கிறீர்களா?
கோஷ்டி பூசல் போன்ற எந்தப் புகைச்சலும் பாஜகவில் கிடையாது. இங்கே ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. கட்சி தலைமையின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
அண்ணாமலை பெயரில் நெல்லையில் நற்பணி மன்றம் தொடங்கியிருக்கிறார்களே..?
இதில் தனக்கு உடன்பாடு இல்லை என அண்ணாமலையே தெளிவாக சொல்லிவிட்டதால் இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் அண்ணாமலை மீது கொண்ட அன்பினால் வைத்திருக்கிறார்கள். எத்தனையோ நடிகர்களுக்கு நற்பணி மன்றம் இருப்பதைப் போல அண்ணாமலை பெயரிலும் ஒரு நற்பணி மன்றத்தை தொடங்கி இருக்கிறார்கள். இதை பாசிட்டிவாகத்தான் பார்க்க வேண்டும்.
விஜய் பாஜக கூட்டணிக்கு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
விஜய் அரசியலுக்கு வந்ததால் திமுகவுக்குத்தான் அதிகம் பாதிப்பு. யாருடன் கூட்டணி என விஜய் தான் முடிவெடுக்க வேண்டும்.
அதுபற்றி நான் எதுவும் சொல்ல முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT