Published : 03 Nov 2025 07:29 AM
Last Updated : 03 Nov 2025 07:29 AM

மன வருத்தங்கள் இருக்கும் தான் அதற்காக தலைப்பு செய்தி போடாதீர்கள்: பொடி வைத்து பேசும் செல்லூர் கே.ராஜூ

எல்லோரும் ஒரே கருத்துகளுடன் இருக்கமாட்டார்கள், மனவருத்தங்கள் இருக்கும். அதை பொதுவெளியில் சொல்லக்கூடாது. அதற்காக இதை தலைப்பு செய்தியாக போடாதீர்கள் என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது: நான் டெல்டா மாவட்டத்துக்காரன் என்று முதலமைச்சர் பெருமையாக கூறி வருகிறார். அப்படிப்பட்டவர், அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பிரச்சினையை காது கொடுத்து கேட்டிருக்க வேண்டும். நெல் கொள்முதலை முறையாக செய்திருக்க வேண்டும். எங்கள் பொதுச்செயலாளர் ஒரு விவசாயியாக இருப்பதால் விவசாயிகள் பிரச்சினை என்னவென்று தெரியும். அதனால், நேரில் போய் பார்த்து ஆய்வு செய்ததால் தற்போது போர்க்கால அடிப்படையில் நெல்கொள்முதல் விறு விறுப்பாக நடப்பதாக சமாளிக்கிறார்கள்.

அதிமுகவின் இதுபோன்ற மக்கள் செயல்பாடுகளை முடக்குவதற்காக எங்களிலேயே மனவருத்தம் கொண்டவர்களை கொண்டு தூண்டிவிடுகிறார்கள். எல்லோரும் ஒரே கருத்துகளுடன் இருக்கமாட்டார்கள். யாருமே அப்படி இருப்பதில்லை. எல்லோருக்கும்மன வேற்றுமை இருக்கும். ஏற்றத்தாழ்வு, ஈகோ பிரச்சனை, இதுவெல்லாம் இருக்கும். அவர்களை வைத்துக் கொண்டு இந்த ஆட்சியின் அவலங்களை மூடி மறைக்கலாம் என்று பார்க்கிறார்கள். இதே செங்கோட்டையனும் சேர்ந்துதான்பழனிசாமியை பொதுச்செயலாளராக்குவதற்கு எங்களுடன் சேர்ந்து பாடுபட்டார். ஒற்றைத் தலைமை வேண்டுமென்றவர், ஓ.பன்னீர் செல்வம் நீக்கத்தை சரியென்றவரும் அவர்தான்.

யார் இருந்தால் கட்சிக்கு நல்லது என்பதை கட்சித் தலைமை முடிவெடுக்கிறது. தலைமையை உருவாக்கிவிட்டால் அந்த தலைமை சொல்வதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். எதுவும் வெளிப்படையாக சொல்லக்கூடாது. எனக்கே கூட பல வருத்தங்கள் இருக்கும். வருத்தம் இருப்பது என்பதற்காக ஊடகங்களை அழைத்து பொதுவெளியில் சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா? பொதுச்செயலாளரை பார்த்து முறையாக முறையிட வேண்டும். அப்படியும் செய்யமுடியவில்லையென்றால் அமைதியாக இருந்துவிட்டு எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது பொதுச்செயலாளரிடம் பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது செய்தியாளர்கள், ‘‘அப்படியென்றால் உங்களுக்கு கட்சியில் மனவருத்தம் இருக்கிறதா?’’ என்று கேட்டதற்கு, அதிர்ச்சியடைந்த செல்லூர் கே.ராஜூ, ‘‘யாரு சொன்னா, ஒரு உதாரணத்திற்கு நான் சொன்னால், எனக்கு மனவருத்தம் இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள், தேவையில்லாமல் இதையே தலைப்பா போட்டு இழுத்துவிட பார்க்கிறீர்கள். அந்த மனவருத்தம் செல்லூர் ராஜூவுக்கு இல்லை. என்னை எங்க பொதுச்செயலாளர் நல்லா வைத்துள்ளார். பொதுவாக ஒரு மனிதனுக்கு மன வருத்தம் இருக்கிறது என்றால், பொதுவெளியில் சொல்லக்கூடாது. அதற்காக சொன்னேன்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x