Published : 03 Nov 2025 07:02 AM
Last Updated : 03 Nov 2025 07:02 AM
சென்னை: ககன்யான் திட்டத்தின் ஆளில்லா விண்கலன் மார்ச் மாதத்துக்குள் விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் கூறினார்.
அவர் ஹரிகோட்டாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறையாக, செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்ட பிறகும், கிரையோஜெனிக் இயந்திரம் மீண்டும் 100 விநாடிகள் இயக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது பெரிய சாதனையாகும். இதன்மூலம் பல்வேறு செயற்கைக் கோள்களை, ஒரே ராக்கெட்டில் சுமந்து சென்று புவிவட்டப் பாதைகளில் நிலைநிறுத்த முடியும்.
அடுத்தகட்டமாக 5 மாதங்களில் 7 ராக்கெட் ஏவுதல் திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். எல்விஎம் 3-எம் 6 ராக்கெட் திட்டம் மூலம் தனியார் தகவல் தொடர்பு செயற்கைக் கோள் டிச. 2-ம் வாரத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்த பின்னர் 3 வாரங்களுக்கு ஒரு ராக்கெட் ஏவப்படும்.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை சாத்தியமாக்குவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். முன்னதாக, 3 ஆளில்லா விண்கலன்களை விண்வெளிக்கு அனுப்ப வேண்டும். அதில் முதலாவது கலனை மார்ச் மாதத்துக்குள் அனுப்பவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்த 5 ஆண்டுகளில 50 விண்வெளி திட்டங்களை செயல்படுத்த பிரதமர் இலக்கு நிர்ணயித்துள்ளார். அதற்காக தீவிரமாக பணியாற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். எல்விஎம்-3 ராக்கெட் திட்ட இயக்குநர் விக்டர் ஜோசப், சிஎம்எஸ்-3 செயற்கைக்கோள் திட்ட இயக்குநர் ராஜேந்திர குமார் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT