Published : 03 Nov 2025 06:00 AM
Last Updated : 03 Nov 2025 06:00 AM
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் மணிவிழா நவ. 10-ம் தேதி நடைபெற உள்ளது. மணிவிழா மாநாட்டு நிகழ்வுகள் நேற்று முன்தினம் தொடங்கின. 2-வது நாளான நேற்று ‘சரபபுராணம்- மூலமும் உரைநடைச் சுருக்கமும்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தொடர்ந்து, நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி மணி விழா சிறப்பு மலரை வெளியிட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 46-வது குருமகா சந்நிதானம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மணி விழா மலரைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர், ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவது: தருமபுரம் ஆதீனம் சமூகம், தேசம், சனாதன தர்மத்துக்கு 500 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. தமிழகம் ஒரு புண்ணிய பூமி. சனாதனக் கொள்கையை அழிய விடாமல் பாதுகாப்பதில் ஆதீனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மக்களின் நம்பிக்கையையும், மரபையும், வழிபாட்டையும் தொடர்ந்து பேணிக்காக்கும் நிறுவனங்கள் ஆதீனங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.மேகாலயா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன், திருப்பனந்தாள் காசி மடம் 22-வது அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சபாபதி தம்பிரான் சுவாமிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT