Published : 03 Nov 2025 12:23 AM
Last Updated : 03 Nov 2025 12:23 AM
ஸ்ரீஹரிகோட்டா: கடற்படை பயன்பாட்டுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள், எல்விஎம்-3 ராக்கெட் மூலம் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இதன்மூலம் தனது வரலாற்றில் புவிவட்ட சுற்றுப்பாதைக்கு அதிகபட்ச எடை கொண்ட செயற்கைக்கோளை செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.
அதிகஎடை கொண்ட செயற்கைக்கோள்களை பிற நாடுகளின் உதவி கொண்டு விண்னுக்கு அனுப்ப வேண்டிய நிலையில் இஸ்ரோ இருந்தது. அதனால் செலவீனம் அதிகரிப் பதுடன், நேர விரயமும் ஏற்பட்டது. இதையடுத்து அனைத்து ராக்கெட்களின் உந்துவிசைகளை அதிகரிக்கும் பணிகளை இஸ்ரோ முன்னெடுத்தது. அதன்பலனாக இஸ்ரோவின் பாகுபலி எனப்படும் எல்விஎம்-3 ராக்கெட்டின் எஸ் 200 மோட்டார்கள், விகாஸ் இயந்திரம், கிரையோஜெனிக் இயந்திரம் ஆகியவற்றின் திறன் மேம்படுத்தப்பட்டு அதன் உந்துவிசை வேகமானது வழக்கத்தைவிட 14 விநாடிகள் வரை அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து எல்விஎம்-3 ராக்கெட் மூலமாக 4,410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 செயற்கைக் கோளை விண்ணில் புவி வட்டப் பாதைக்கு செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது.
இந்த ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் நேற்றுமுன்தினம் தொடங்கியது. தொடர்ந்து ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் நேற்று மாலை 5.26 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் தரையில் இருந்து புறப்பட்ட 16 நிமிடத்தில் செயற்கைக் கோளை 169 கி.மீ உயரத்தில் திட்டமிட்ட புவிவட்ட பரிமாற்ற சுற்றுப்பாதையில் வெற்றிகரமாகநிலைநிறுத்தியது.
வரும் நாட்களில் இதன் சுற்றுப்பாதை படிப்படியாக மாற்றப்பட்டு குறைந்தபட்சம் 170 கி.மீ.தூரமும், அதிகபட்சம் 29,970 கி.மீ.தொலைவும் கொண்ட புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகள். இதில் அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளன. இந்திய நிலப்பரப்பு மற்றும் சுமார் 20 கி.மீ. பரப்பளவு கொண்ட கடலோரப் பகுதிகளை கண்காணிக்க உதவும். அனைத்துவிதமான போர் விமானங்கள், போர்க்கப்பல்கள், நீர்முழ்கிக் கப்பல்கள்மற்றும் தரை கட்டுப்பாடு மையங்கள் இடையேயான ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்தி மிகவும் பாதுகாப்பானதாக வழங்கும். போர்க்காலங்களில் இந்த செயற்கைக்கோளில் இருந்து கடற்படையினர் நேரடியாகவே தகவல்களை பெறலாம். இதனால் காலவிரயம் தவிர்க்கப்படும். எதிரி நாடுகளின் கடல்வழி ஊடுருவலை துல்லியமாக கண்காணிக்க முடியும்.
இதுதவிர கடற்படை பயனுக்காக மேலும் 1 செயற்கைக்கோள்விண்ணில் செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி மூலம் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதல் திறன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவை அடுத்த செயல்படுத்தப்பட உள்ள மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் ககன்யான், சந்திரயான்-4 திட்டங்களுக்கும் உந்துதலாக இருக்கும். மேலும், உள்நாட்டிலேயே அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் பெற்று விண்வெளித் துறையில் தற்சார்பு நிலையை விரைவில் எட்டுவோம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT