Published : 02 Nov 2025 02:50 PM
Last Updated : 02 Nov 2025 02:50 PM
கரூர்: “வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்ஐஆர் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தான் எஸ்ஐஆர்-ஐ கடுமையாக எதிர்த்து அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டது.” என எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கரூரில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் இன்று (நவ.2-ம் தேதி) கரூர் எம்.பி. செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு, இரண்டு யூனியன் பிரதேசங்கள் உட்பட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்) திணிக்கப்படுகிறது. இதனை இண்டியா கூட்டணி எதிர்க்கிறது.
எஸ்ஐஆர் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த பயிற்சியின் போது, ஒரு படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியலை அப்டேட் செய்யும் பணிகளை மேற்கொள்வார்கள்.
இறந்தவர்கள் பெயர்களை நீக்குவார்கள். ஆனால் புதிய நடைமுறை குறித்து புரிந்து கொள்ள முடியவில்லை. பிஹாரில் எஸ்ஐஆர் மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதிய படிவத்தில், 2002-ம் ஆண்டு முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் படிவத்தில் வாக்காளரின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், பாகம் எண், பாகம் பெயர், சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதி, தற்போதைய புகைப்படம் ஆகியவை கேட்கப்பட்டுள்ளது.
பிறந்த தேதி, ஆதார் எண் (விருப்பத்தேர்வு), போன், தந்தை/பாதுகாவலரின் பெயர், அவர்களின் புகைப்பட அடையாள அட்டை எண், தாயாரின் பெயர், அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் (இருப்பின்), துணைவரின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் (இருப்பின்) ஆகிய விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
மேலும் 2002-ம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்தப் பட்டியலில் உள்ள வாக்காளர் பெயர், அடையாள அட்டை எண், உறவினரின் பெயர், உறவு முறை பாகம் எண், வரிசை எண் ஆகிய விவரங்கள் மேலும் உறவினரின் மேற்கண்ட விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன.
2002-ம் ஆண்டில் இருந்த உறவினர்கள் தற்போது இல்லை என்றால் அவர்கள் இறப்புச் சான்றிதழை சமர்பிக்கும் நிலை உள்ளது. சொத்து இருப்பவர்கள் இறப்புச் சான்றிதழ் பெறுவார்கள். எல்லோரும் இறப்புச் சான்றிதழ் பெறுவதில்லை. இதனால் இறப்புச் சான்றிதழ் இணைக்காவிட்டாலோ, இப்படிவத்தை நகலெடுக்க முடியாததால் தவறாகவோ, முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலோ நிராகரிக்க வாய்ப்புள்ளது.
2002-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளித்தவர்களின் குடியுரிமையை தேர்தல் ஆணையம் தனது அதிகாரித்தை மீறி சரிபார்க்கும் பணியை மேற்கொள்கிறது. இதனை உள்துறை அமைச்சகம் தான் செய்யவேண்டும். வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்ஐஆர் மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கும் முயற்சி தான் எஸ்ஐஆர். இதனால் தான் எஸ்ஐஆர்-ஐ கடுமையாக எதிர்த்து அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறது. நம் நம்பத்தன்மையை சிதைக்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவர திருத்தம் என்ற பெயரில் தமிழநாட்டு மக்கள் உட்பட 12 மாநிலங்களில் உள்ள வாக்காளர்களை நீக்க முயற்சிக்கும் இந்தச் செயலை இண்டியா கூட்டணி கடுமையாக எதிர்க்கிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT