Published : 02 Nov 2025 10:54 AM
Last Updated : 02 Nov 2025 10:54 AM
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் விருப்பத்துக்கு மாறாக சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களையும் பிரிந்து சென்றவர்களையும் மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால், கட்சியை ஒருங்கிணைக்க முயற்சி எடுப்பதாகச் சொல்லும் சசிகலாவும் தினகரனுமே ஆளுக்கொரு திசையில் பயணிக்கிறார்கள்.
இதை உறுதிப்படுத்துவது போல், அண்மையில் பசும்பொன்னுக்கு அஞ்சலி செலுத்த வந்த சசிகலாவை சந்திப்பதற்கான வாய்ப்பு இருந்தும் தினகரன் ஏனோ அதை தவிர்த்தார். இத்தனைக்கும், ஓபிஎஸ்ஸும் செங்கோட்டையனும் சசிகலா வருகைக்காக காத்திருந்து அவரைச் சந்தித்தார்கள். இதுவும் அரசியல் வட்டாரத்தில் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது.
ஆனால் பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ‘‘சின்னம்மா எங்களோடு வந்து இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் தாமதமாக புறப்பட்டதால் அவரால் சரியான நேரத்திற்கு இங்கு வரமுடியவில்லை. அவர்கள் மனதால் எங்களுடன் எப்போதும் இருப்பார்கள். ஏனென்றால், துரோகம் வீழ்த்தப்பட வேண்டும்” என்று சமாளித்தார்.
சசிகலாவை சந்திக்காமல் தவிர்ப்பது ஏன் என நேற்று மதுரை சோழவந்தானில் தினகரனிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘‘சின்னம்மா என்பதை தாண்டி அவர்கள் எனக்கு சித்தி. வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள். இப்படியெல்லாம் கேள்வி கேட்காதீர்கள்’’ என்றார்.
தினகரனும் சசிகலாவும் பொதுவெளியில் சந்தித்துப் பேசுவதை தவிர்ப்பது ஏன் என்பது அமமுகவினருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. உள் விவகாரங்களை அறிந்த அமமுக நிர்வாகிகளோ, ‘‘சின்னம்மா சிறையில் இருந்த சமயத்தில் தினகரன் அமமுகவை தொடங்கியதில் இருவருக்குள்ளும் ஆரம்பத்தில் சில வருத்தங்கள் இருந்தன. ஆனால், தற்போது அதெல்லாம் சரியாகிவிட்டது. சீக்கிரமே பொதுவெளியில் இருவரும் சந்தித்துப் பேசுவார்கள்” என்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT