Published : 02 Nov 2025 12:07 AM
Last Updated : 02 Nov 2025 12:07 AM

அதிமுக தலைமைக்கு எதிராக யார் துரோகம் செய்தாலும் நடவடிக்கை: செங்கோட்டையன் நீக்கம் குறித்து இபிஎஸ் விளக்கம்

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. உடன் அமைப்புச் செயலாளர் செம்மலை.

சேலம்: பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிராக, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார். யார் துரோகம் செய்தாலும் கட்சித் தலைமை வேடிக்கை பார்க்காது என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று கூறியதாவது: அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை கொண்டு வந்ததற்காக விவசாயிகள் சார்பில் எனக்கு பாராட்டு விழா நடத்தினர். இந்த திட்டத்தால் செங்கோட்டையனின் கோபி தொகுதியும் பயனடையும் நிலையில்கூட, விழா பேனரில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை என்று கூறி, அந்த விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார். ஆனால், அவரது தொகுதியில், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில், கருணாநிதி, ஸ்டாலின் படங்கள் மட்டுமே இருந்த நிலையிலும் அதில் அவர் கலந்து கொண்டார். திமுகவின் ‘பி’ டீம் வேலையை அப்போதே பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று அவர் கூறுவது சரியான கருத்து அல்ல. அவர் கூறுபவர்கள் எல்லோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி ஓபிஎஸ் நீக்கப்பட்டார். அவருடன் கட்சியினர் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிராக, கட்சி விரோதநடவடிக்கையில் ஈடுபட்டதால், சட்டவிதிகளின்படி செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவையில் இருந்தும், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும் அவரை ஜெயலலிதா நீக்கினார். ஆனால்,நான் முதல்வரானபோது, அவருக்கு அமைச்சரவையில் இடம் தரப்பட்டது. ஜெயலலிதா கடந்த 2011-ல் ஒழுங்குநடவடிக்கை எடுத்து டிடிவி. தினகரனை கட்சியில் இருந்து நீக்கினார். ஜெயலலிதா மறைந்த பிறகே, தினகரனுக்கு துணைப்பொதுச் செயலாளர் பதவியை சசிகலா வழங்கினார். சட்டப்பேரவையிலோ, பொதுக்கூட்டத்திலோ செங்கோட்டையன் திமுகவை எதிர்த்து பேசியது கிடையாது. அவர் திமுகவின் ‘பி டீம்’ என்பது நிரூபணம் ஆகிவிட்டது. யார் விரோதமாக செயல்பட்டாலும், துரோகம் செய்தாலும் கட்சித் தலைமை வேடிக்கை பார்க்காது.

ஆட்சியைக் கவிழ்க்க 18 எம்எல்ஏக்களை கட்சியில் இருந்து வெளியே அழைத்துச் சென்றவர் தினகரன். அவர் எப்படி கட்சிக்கு விசுவாசமாக இருப்பார். (தினகரனுடன் செங்கோட்டையன் பேசும் வீடியோ காட்சியை காண்பிக்கிறார் பழனிசாமி.) ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சட்டப்பேரவையில் அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர் ஓ.பன்னீர்செல்வம். நாங்கள் அவருக்கு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை கொடுத்தோம். ஆனாலும், அவர், எதிராகவே செயல்பட்டார். அதிமுக அலுவலகத்தை ஆட்களை வைத்து அடித்து நொறுக்கினார். இப்படிப்பட்டவர்கள் கட்சிக்கு உண்மையாக இருப்பார்களா? பதவி இல்லை என்றால் எந்த எல்லை வரையும் செல்வார்கள்.

திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது என 4 நாட்களுக்கு முன்பு கூறினார். அதிமுக ஆட்சி வர வேண்டும் என இவர்கள் நினைக்கவில்லை. மறைமுகமாக ஆதரித்து, திமுக ஆட்சிக்கு வர நினைக்கிறார்கள். இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ‘பி டீம்’ ஆக செயல்படுவதுதான் திட்டம். சசிகலா பற்றி சமூக வலைதளங்களில் ஓபிஎஸ் பதிவு செய்ததை பாருங்கள். (ஓபிஎஸ்ஸின் முந்தைய பதிவுகளை காண்பிக்கிறார்) ‘மருத்துவமனையில் அம்மா இருந்தபோது, சசிகலா பேசாதது ஏன்.. குற்றவாளி சசிகலா.. தப்பியது தமிழகம்.. சசிகலா உள்ளிட்ட மூவர் உடனே சரணடைய உத்தரவு..’ இதெல்லாம் வலைதளங்களில் ஓபிஎஸ் பதிவு செய்தவை. கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் இன்று அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

‘நீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடருவேன்’ - அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கோபிச்செட்டிபாளையம் அடுத்த குள்ளம்பாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் நேற்று கூறியதாவது: எம்ஜிஆர் கடந்த 1972-ல் கட்சி ஆரம்பித்ததில் இருந்துஅதிமுகவில் நிர்வாகியாக இருந்துள்ளேன். 53 ஆண்டுகள்பாடுபட்டு, கட்சியை வளர்த்தவன். கிளைச் செயலாளராக இருந்து படிப்படியாக உயர்ந்தவன். 9 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறேன். பழனிசாமி 1989-ல்தான் கட்சிக்கு வந்தார். கோடநாடு வழக்கில் அவர் ‘ஏ ஒன்’ என்பதை மறந்துவிட்டு என்னை ‘பி டீம்’ என்கிறார்.

கடந்த 30-ம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னுக்கு சென்றிருந்தேன். அப்போது அனைவரும் ஒன்றிணைந்து, கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி. தினகரனை சந்தித்தேன். தேவர் பெருமகனார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக என்னை கட்சியில் இருந்து நீக்கி பரிசளித்திருக்கிறார் பழனிசாமி. இது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. கண்ணீர் சிந்தும் நிலையில் உள்ளேன். கட்சி விதி 43-ன்படி அவர் எனக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும். எனவே, கட்சியில் இருந்து என்னை நீக்கியது தொடர்பாக வழக்கு தொடருவேன். இவ்வாறு அவர் கூறினார். ஆதரவாளர்கள் ஏராளமானோர் அவரது வீட்டில் குவிந்தனர். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அவர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x