Published : 02 Nov 2025 12:25 AM
Last Updated : 02 Nov 2025 12:25 AM
தஞ்சாவூர்: தமிழகத்தில் திமுக ஆட்சி முடிவதற்கான `கவுன்ட் டவுன்' தொடங்கிவிட்டது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு, தஞ்சாவூரில் நேற்று அவரது சிலைக்கு பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நயினார் நாகேந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: பெரிய கோயிலுக்கு வெளியே உள்ள ராஜராஜ சோழன் சிலையை கோயிலுக்கு உள்ளே வைப்பது குறித்து தலைவர்களிடம் ஆலோசித்து, அதனடிப்படையில் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்வோம்.
நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. நெல்மணிகள் முளைத்து வீணாகி வருகின்றன. விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், இதுகுறித்து கவலைப்படாமல் முதல்வரும், துணை முதல்வரும் சினிமா பார்த்துக் கொண்டிருக்கின்றனர். திமுக ஆட்சி முடிய இன்னும் 140 நாட்கள்தான் உள்ளன. இதற்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கும்பகோணத்தில் ஏராளமான கோயில் கோபுரங்கள் சேதமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளன. அவற்றை சரிசெய்வது குறித்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சிந்திக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மாற்றுக் கட்சியின் பிரச்சினை குறித்து அவர் பேச வேண்டிய அவசியம் இல்லை. மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT