Published : 01 Nov 2025 05:06 PM
Last Updated : 01 Nov 2025 05:06 PM
அரியலூர்: அரியலூரில் உள்ள சிமென்ட் தொழிற்சாலைகள் கோடிக் கணக்கில் லாபம் அடைந்து விட்டு இந்தப் பகுதி மக்களுக்கான சாலை, மருத்துவம்,குடிநீர், கல்விக் கூடங்களுக்கான எந்த வசதியையும் செய்து தரவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அரியலூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ எனும் நடைப்பயணத்தை இன்று மாலை மேற்கொள்கிறார். முன்னதாக பெரியநாகலூரில் தனியார் சிமென்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது: அரியலூரில் உள்ள சிமென்ட் தொழிற்சாலைகள் கோடிக் கணக்கில் லாபம் அடைந்துவிட்டு இந்தப் பகுதி மக்களுக்கான சாலை, மருத்துவம்,குடிநீர், கல்விக் கூடங்களுக்கான எந்த வசதியையும் செய்து தரவில்லை
சுண்ணாம்பு சுரங்கத்திற்காக நிலங்களை கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. ஏறக்குறைய 50,000 ஏக்கர் நிலங்களில் அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 150 அடி ஆழம் அளவுக்கு வெட்டி எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கிறது.
சிமென்ட் தொழிற்சாலைகளால் விபத்து, காற்று, நீர், நிலம் மாசு அடைகிறது. மண்ணையும், மக்களையும் அழித்துவரும் எந்த தொழிற்சாலையும் தேவையில்லை. உடனடியாக மூடிச்செல்ல வேண்டும். இல்லையெனில் நாங்கள் இழுத்து மூடுவோம். முதல்வர் ஸ்டாலினுக்கு நீர் என்றாலும், மேலாண்மை என்றாலும் என்னவென்று தெரியாது.
ரூ.1,000 உரிமைத் தொகை யாருக்கு வேண்டும். இந்த திட்டத்துக்கு ரூ.13 ஆயிரம், ரூ.14 ஆயிரம் கோடி தொகையை மகளிர் உரிமை தொகைக்கு செலவு செய்வதற்கு பதிலாக நீர் மேலாண்மை திட்டத்துக்கு செயல்படுத்த வேண்டும்.
ரூ.1,000, ரூ.2,000 என பிச்சை போடுகிறீர்கள். இதில் என்ன வரப்போகிறது. ஓட்டுக்காக இதை செய்கிறீர்கள். கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை திட்டத்திற்காக கர்நாடக அரசு ரூ.70 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. கர்நாடக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை 2 முறை எடுத்துள்ளது. கர்நாடக அரசிடம் தமிழ்நாடு அரசு கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த நரக ஆட்சி இன்னும் 4 மாதங்களே உள்ளன அதன்பின்னர் மக்கள் இந்த ஆட்சியைத் தூக்கி எறிவார்கள். இந்த சமூகவிரோத ஆட்சியின் ஊழல் இனி தினம் ஒவ்வொன்றாக வெளிவரும். அதிகாரிகள் இனி தைரியமாக வெளியே வருவார்கள். இந்த ஆட்சி ஆள்வதற்கு தகுதியற்ற ஆட்சி வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக படுதோல்வி அடையும். பல தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் நிலைக்கு திமுக தள்ளப்படும்.” என்றார்.
இதனைத் தொடர்ந்து ஜெ.சித்தமல்லி நீர்த்தேக்கத்தை பார்வையிட்டார். மாலை ஜெயங்கொண்டத்தில் நடைப்பயணம் மேற்கொள்ளும் அன்புமணி, தொடர்ந்து அண்ணா சிலை பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT