Published : 01 Nov 2025 04:05 PM
Last Updated : 01 Nov 2025 04:05 PM

‘தமிழகத்தில் ஆளுநர் ரவியை தவிர வேறு எந்த பிஹாரிக்கும் பிரச்சினை இல்லை’ - துரை வைகோ

திருச்சி: “தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் பிஹாரியான ஆர்.என்.ரவியை தவிர வேறு எந்த பிஹாரிக்கும் தமிழகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை’ என துரை வைகோ எம்.பி. கிண்டல் தொனியில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிஹார் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்பியுமான துரை வைகோ திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாது: தமிழக இளைஞர்கள் வெளிநாட்டு வேலை என ஆசை வார்த்தை கூறி பலர் தாய்லாந்து, மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்காக அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்கள் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அதற்கு ஒத்துழைக்காதவர்கள் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள். தூத்துக்குடி, விருதுநகரைச் சேர்ந்த 3 இளைஞர்கள் கடந்த 70 நாட்களுக்கு முன் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு வேலை தெரியவில்லை எனப் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். பணம் கொடுத்தால் தான் இந்தியாவுக்கு அனுப்புவோம் எனத் தெரிவித்துள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அவர்களை வேலைக்கு அனுப்பியவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலை என நம்பி இளைஞர்கள் யாரும் ஏமாற வேண்டாம். ரஷ்யாவில் படிக்கச் சென்ற தமிழக மாணவர் கிஷோர் சரவணன் ரஷ்யா - உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டார்.

இதுகுறித்து பிரதமரிடமும் வெளியுறவு துறை அமைச்சரிடமும் பேசினேன். அவர்கள் ரஷ்யாவிடம் பேசிய பின் அவர் போர் நடக்கும் இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை போரில் ஈடுபடுத்தக் கூடாது எனக் கூறிய நீதிமன்றம் வேறு வழக்குக்காக சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. இந்திய - ரஷ்யா ஒப்பந்தத்தின்படி அவரை இந்தியாவுக்கு அழைத்து வர முயற்சிகள் எடுக்கப்படும்.

பிஹாரில் நடந்த எஸ்.ஐ.ஆர் குறித்து உச்ச நீதிமன்றம் கேட்ட சில கேள்விகளுக்கு முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையம் தரவில்லை.

இந்தச் சூழலில் தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை, பண்டிகை காலத்தில் இது அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகளுக்கும் பல சிரமங்கள் ஏற்படும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில் அவசரஅவசரமாக இதை மேற்கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் பிஹாரில் நடைபெற்றதுபோல் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் நிலை ஏற்படும். எனவே எஸ்ஐஆர் நடத்த உரிய கால அவகாசம் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும் மண். தமிழ்நாட்டில் பிஹார் தொழிலாளர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, யாரும் அவர்களை தாக்கவில்லை.பிரதமர் மோடி சாதி, மத, அரசியல் எல்லைகளைக் கடந்து செயல்படவும், பேசவும் வேண்டும்.

ஆனால் பிஹாரில் பிரதமர் பேசி இருப்பது, பிஹார் - தமிழ்நாட்டுக்கு இடையே பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அவரது பேச்சு மலிவானது, கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் பிஹாரியான ஆர்.என்.ரவி தான் தமிழ்நாட்டு மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறாரே தவிர வேறு யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.

அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது உட்கட்சி பிரச்சினை. அதில் கருத்து கூற முடியாது. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. அதில் யார் குற்றவாளி என்பதை நீதிமன்றம் தான் கூறும். இந்த விவகாரத்தில் அரசு தலையிட முடியாது.

சீமான் - வைகோ சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். சீமான் பெரியார், அண்ணா, திராவிட இயக்கங்களை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். அதில் எங்களுக்கு எந்தவித உடன்பாடும் கிடையாது.” என்றார். மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டிடிசி சேரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x