Last Updated : 01 Nov, 2025 03:39 PM

2  

Published : 01 Nov 2025 03:39 PM
Last Updated : 01 Nov 2025 03:39 PM

பிஹாரில் துன்பத்தை தாங்க முடியாத மக்கள் தமிழகம் வந்து இன்பமாக வாழ்கின்றனர்: மு.அப்பாவு

திருநெல்வேலி: பிஹாரில் துன்பத்தை தாங்க முடியாத மக்கள் தமிழகத்துக்கு வந்து இன்பமாக வாழ்கின்றனர் என சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் ரூ.65.99 கோடி மதிப்பில் 6 கிலோமீட்டர் தூரத்துக்கு 10 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்தச் சாலையை பார்வையிட்ட தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: செங்கோட்டையன் அதிமுக உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவரை சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கக் கோரி இதுவரை கடிதம் எதுவும் தரவில்லை. கடிதம் அளித்தால் அதைப் பொருந்து ஆய்வு செய்து, முடிவு எடுக்கப்படும்.

ஒடிசாவில் புரி ஜெகந்நாதர் ஆலய சாவியை அப்போதைய முதல்வருக்கு நெருக்கமாக இருந்த தமிகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பாண்டியன் என்பவர் தமிழகத்துக்கு கொண்டு சென்றுவிட்டார் என்று பேசினர். இப்போது பிஹார் தேர்தலுக்காக மீண்டும் ஒரு கருத்தை பரப்புரையில் தெரிவித்துள்ளார். பிரமதர் பதவி வகிக்கும் மோடி ஓட்டுக்காக அந்த வார்த்தைகளை பயன்படுத்தியிருக்க கூடாது.

பிற மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் தமிழக பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கின்றனர். பிற மாநில மாணவ, மாணவிகளுக்கும் பாரபட்சமின்றி மாதம் ஆயிரம் ரூபாய் முதல்வர் வழங்குகிறார். பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பிஹாரில் அவர்கள் தரும் துன்பத்தை தாங்க முடியாத மக்கள் தமிழகத்துக்கு வந்து இன்பமாக வாழ்கின்றனர். இந்த ஆட்சியால் யாரும் துன்பமாக இல்லை. எல்லோருக்கும் நன்மையை அளிக்கிறது இந்த ஆட்சி. மணிமுத்தாறு - காரையாறு அணை இணைப்பு தொடர்பாக மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அந்த முயற்சி நடந்து வருகிறது.

நகராட்சி நிர்வாகத் துறையில் 2538 பணியிடங்கள் நேர்மையாக, வெளிப்படைத்தன்மையோடு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தேர்வு நடத்தி, பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் எந்தவிதமான தவறும் நடைபெறவில்லை. அமலாக்கத் துறை தமிழக டிஜிபிக்கு இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அறிக்கை அனுப்பியது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. நீதிமன்ற அவமதிப்பு என்றே சொல்லலாம்.

2017-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உறுதிப்படுத்தப்படாத ஆவணங்கள் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்வது அல்லது விசாரணையை அனுமதிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்று கூறியது. 2012-ல் சஹாரா நிறுவனங்களில் நிதி திரட்டுவதற்காக செபியிடம் அனுமதி வாங்கி அதில் முறைகேடு செய்ததால் சஹாரா நிறுவனம் மீது செபி நடவடிக்கை எடுத்தது. உடனடியாக சிபிஐ, வருமானவரித்துறை 2013, 2014-ல் சஹாரா நிறுவனங்களில் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றியது.

அதில் ஒரு ஆவணம் சஹாரா டைரீஸ் நிறுவனத்தில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த இப்போதைய பிரதமர் நரேந்திர மோடி 25 கோடி ரூபாய் நான்கு தவணையாக கையூட்டு பெற்றார் என்பது வெளியானது. அப்போது மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கில் அரசு சாரா நிறுவனத்துக்காக ஆஜராகினார். உடனடியாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும், விசாரணை ஆணையம் அமைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கில், 2017-ல் தீர்ப்பளிக்கப்பட்டது. உயர் அரசியலமைப்பு செயல்பாட்டாளர்களுக்கு எதிராக இதுபோன்ற உறுதி செய்யப்படாத ஆவணங்கள் மூலம் எப்ஐஆர் பதிவு செய்வது, விசாரணைக்கு உத்தரவிடுவது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இப்போது உறுதிப்படுத்தப்படாத ஆவணத்தை கையில் எடுத்து கே.என்.நேரு மீது விசாரணை நடத்தக் கூறுவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.

பிரமதர் கையூட்டு பெற்றதாக வந்த உறுதிப்படுத்தப்படாத ஆவணம் தொடர்பாக அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க தைரியம் உள்ளதா?. தமிழக அரசுக்கு தேர்தல் நேரத்தில் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் மணலில் ஊழல், டாஸ்மாக்கில் ஊழல், பணி நியமனத்தில் முறைகேடு என்று கூறி அமலாக்கத் துறையை பயன்படுத்துகின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்ட அமலாக்கத் துறை மீது நடவடிக்கை எடுக்கலாம். தமிழக ஆளுநர் பாதி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இன்னும் பாதி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அப்பாவு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x