Published : 01 Nov 2025 02:01 PM
Last Updated : 01 Nov 2025 02:01 PM
கோவை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் திமுக அதிக வாக்குகளை பெற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் சிங்காநல்லூரிலும், கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் தொண்டாமுத்தூரிலும், கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஈச்சனாரியிலும், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். சிங்காநல்லூர் கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ்செல்வன், தொண்டாமுத்தூரில் நடந்த கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, ஈச்சனாரியில் நடந்த கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதுதொடர்பாக, மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வரின் வழிகாட்டுதலின்படி இந்த நிகழ்வுகள் கோவையில் நடைபெற்று, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலை விட அதிகமான வாக்குகளை பெறுவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக முதல்வர் தொடர்ந்து எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்.
பிஹார் தேர்தலில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். அதுபோன்ற ஒரு சூழல் தமிழ்நாட்டில் வந்து விடக்கூடாது. அவர்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளை திமுக அனுமதிக்காது. சிறப்பு தீவிர திருத்தம் விவகாரத்தை திமுக மிக கவனமாக கையாண்டு வருகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை மாவட்டம் திமுகவின் கோட்டையாக அமையும். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டங்களில் திமுக தீர்மானக் குழு செயலாளர் நா.கார்த்திக், மாணவரணி மாநில செயலாளர் ராஜீவ்காந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT