Last Updated : 01 Nov, 2025 12:24 PM

2  

Published : 01 Nov 2025 12:24 PM
Last Updated : 01 Nov 2025 12:24 PM

மணல் ஊழல் பற்றி விசாரிக்க திமுக அரசு அஞ்சுவது ஏன்? - அன்புமணி

சென்னை: மணல் ஊழல் பற்றி வழக்கு தொடர்ந்து விசாரிக்க திமுக அரசு அஞ்சுவது ஏன்? என்றும் பெருந்தலைகள் உருளும் என அச்சமா? என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ரூ.4,730 கோடி அளவுக்கு நடைபெற்றுள்ள ஆற்று மணல் கொள்ளை ஊழல் தொடர்பாக தாங்கள் அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்ற அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அரசு தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வரும் மணல் கொள்ளை ஊழல் குறித்து குழந்தைகளுக்குக் கூட தெரிந்திருக்கும் நிலையில், அது குறித்து விசாரிக்க அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மணல் கொள்ளை குறித்தும், அதன் மூலம் ஈட்டப்படும் பல்லாயிரம் கோடி பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்படுவது குறித்தும் கிடைத்த தகவல்களில் அடிப்படையில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 5 மாவட்டங்களில் உள்ள 28 மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

செயற்கை கோள் உதவியுடன் நடத்தப்பட்ட அந்த சோதனையில், ரூ.4730 கோடி மதிப்புள்ள 22.70 லட்சம் யூனிட் மணல் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தது.

ஆனால், தமிழக அரசிடம் இது குறித்து விசாரணை நடத்திய போது, ரூ.36 கோடி அளவுக்க் மட்டுமே மணல் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அரசால் கணக்கு காட்டப்பட்டதை விட 131 மடங்கும், மணல் அள்ள அனுமதிக்கப்பட்ட பரப்பான 190 ஹெக்டேரை விட 5 மடங்கு அதிகமாக 987 ஹெக்டேரிலும் ஆற்று மணல் அள்ளப்பட்டிருப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்த அமலாக்கத்துறை, அதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் திரட்டி, அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யும்படி கடந்த ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் எழுதியது.

அதனடிப்படையில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இது தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது தான் தமிழ்நாடு அதன் நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் மணல் கொள்ளை தொடர்பாக அமலாக்கத்துறை சில ஆதாரங்களை அனுப்பி, அதனடிப்படையில் வழக்கு தொடர வேண்டும் என்று கூறினால், அதை அப்படியே செய்வதற்கு தாங்கள் ஒன்றும் அஞ்சல் நிலையம் அல்ல என்றும் தமிழ்நாடு அரசு கூறியிருக்கிறது.

ஆனால், உயர் நீதிமன்றத்தின் முன்வைத்த வாதங்களில், தமிழகத்தை விட பிற மாநிலங்களில் அதிகளவில் மணல் கொள்ளை நடந்ததாக திமுக அரசு தெரிவித்திருக்கிறதே தவிர, தமிழ்நாட்டில் மணல் கொள்ளை நடக்க நடக்கவில்லை என்று எந்த இடத்திலும் கூறவில்லை. இதன் மூலம் தமிழ்நாட்டில் மணல் கொள்ளை நடந்திருப்பதை திமுக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

மணல் கொள்ளை குறித்து அமலாக்கத்துறை அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குத் தொடரும்படி மாநில அரசை கட்டாயப்படுத்த முடியுமா, முடியாதா? என்ற சட்ட நுணுக்கங்கள் ஒருபுறம் இருக்கட்டும். ஒரு மாநிலத்தின் இயற்கை வளத்தை அழிக்கும் வகையில் நடத்தப்படும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டிய தார்மீகக் கடமையும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும் அந்த மாநிலத்தை ஆளும் அரசுக்கு இருக்கிறதா, இல்லையா? என்பது தான் பா.ம.க. எழுப்பும் வினாவாகும்.

தமிழ்நாட்டில் மணல் கொள்ளை நடப்பது உலகமே அறிந்த உண்மை. தமிழ்நாடு அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின் வாயிலாக அதை நம்மால் உறுதி செய்து கொள்ள முடியும். தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை வெளியிட்ட 2024-25ஆம் ஆண்டுக்கான திட்டச் சாதனை ஆவணத்தின் 117&ஆம் பக்கத்தில் 31.03.2023ஆம் தேதியுடன் முடிந்த ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள 23 மணல் குவாரிகளில் ஒரு யூனிட் ரூ.1000 வீதம் மொத்தம் ரூ.22.21 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியானால், மொத்தம் 2.22 லட்சம் யூனிட் மணல் விற்பனை செய்யப்பட்டுள்ளது; ஒரு சரக்குந்தில் 3 யூனிட் மணல் ஏற்றப்படுவதாக வைத்துக் கொண்டால் ஆண்டு முழுவதும் 73,033 சரக்குந்து அளவுக்கும், தினமும் 202 சரக்குந்து அளவுக்கும் மணல் விற்கப்பட்டுள்ளது. மொத்தம் 23 குவாரிகள் உள்ள நிலையில் ஒரு குவாரியில், ஒரு நாளைக்கு 8.81 சரக்குந்து அளவுக்கு மட்டுமே மணல் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக இந்த புள்ளிவிவரங்கள் தெரிவித்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் எந்த மணல் குவாரிக்கு, எந்த நேரத்தில் போனாலும் குறைந்தது 5 கி.மீ தொலைவுக்கு சரக்குந்துகள் காத்துக்கிடப்பதை பார்க்க முடியும். அத்தகைய நிலையில், ஒரு நாளைக்கு ஒரு குவாரியில் 8 சரக்குந்து அளவுக்கு மட்டுமே மணல் அள்ளப்படுவதாக தமிழ்நாடு அரசு கூறுவதைக் கேட்டால் உலகமே சிரிக்கும்.

ஆற்று மணல் மட்டுமல்ல... தென் மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு மிகப்பெரிய அளவில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. கடந்த மாதம் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி நான் மகிழுந்தில் பயணம் செய்த ஒன்றரை மணி நேரத்தில் குறைந்தது 900 சரக்குந்துகள் கனிம வளங்களை கேரளத்தில் இறக்கிவிட்டு மீண்டும் கனிமவளங்களை ஏற்றுவதற்காக நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு சென்றதை பார்க்க முடிந்தது.

இதிலிருந்தே தென் மாவட்டங்களில் எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். தென் மாவட்டங்களில் கனிமக் கொள்ளையில் ஈடுபடும் கனிமக் கொள்ளையர்களை ஆளுங்கட்சியைச் சேர்ந்த காட்பாதர் ஒருவர் பாதுகாக்கிறார்; அந்த காட்பாதரை முதலமைச்சர் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான் கனிமக்கொள்ளை கட்டுப்படுத்தப்படவில்லை.

ஆற்று மணல் கொள்ளை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதன் மூலம், தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்ற பணி நியமன ஊழல்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பியுள்ள ஆதாரங்களில் அடிப்படையில் வழக்கு தொடராமல் தவிர்க்க திமுக அரசு முயல்கிறது.

ஆற்று மணல் கொள்ளை, கனிமக் கொள்ளை, பணி நியமன ஊழல் உள்ளிட்ட எந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தப்பட்டாலும் திமுகவின் பெருந்தலைகள் கைது செய்யப் பட்டு சிறை செல்ல நேரிடும் என்ற அச்சம் காரணமாகவே திமுக அரசு வழக்கு தொடர மறுத்து வருகிறது.

ஊழலுக்கு எதிராக திமுக அரசு கட்டி வைத்திருக்கும் அதிகாரத் தடுப்பணை இன்னும் 4 மாதங்களில் தகர்த்தெறியப்படும். அதன்பின் நடத்தப்படும் விசாரணையில் கனிமக் கொள்ளை உள்ளிட்ட அனைத்து ஊழல்களிலும் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படப்போவது உறுதி” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x