Published : 01 Nov 2025 07:25 AM
Last Updated : 01 Nov 2025 07:25 AM

மணல் கொள்ளை விவகாரம்: டிஜிபிக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடர முடியுமா? - அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: ‘மணல் கொள்ளை தொடர்​பாக அளித்த தகவல்​களின் அடிப்​படை​யில் வழக்​குப்​ப​திவு செய்ய தமிழக டிஜிபிக்கு உத்​தர​விடக் கோரி எப்​படி வழக்கு தொடர முடி​யும்?’ என அமலாக்​கத் துறைக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது.

மணல் கொள்​ளைக்கு எதி​ராக நடவடிக்கை எடுத்த தூத்​துக்​குடி மாவட்​டம், கோவில்​பத்து கிராம நிர்​வாக அலு​வலர் லூர்து பிரான்​சிஸ், மணல் கொள்​ளை​யர்​களால் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்​.25-ம் தேதி படு​கொலை செய்​யப்​பட்​டார். இதுதொடர்​பான வழக்கு உள்​ளிட்ட 4 வழக்​கு​களின் அடிப்​படை​யில், சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற தடை சட்​டப் பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்து அமலாக்​கத் துறை விசா​ரணை நடத்​தி​யது.

அதைத்​தொடர்ந்​து, தங்​கள் விசா​ரணை​யில் சேகரிக்​கப்​பட்ட ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில், வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை செய்​யக் கோரி தமிழக டிஜிபிக்​கு, 2024-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்​களில் அமலாக்​கத் துறை கடிதம் அனுப்​பி​யிருந்​தது. அதன் மீது நடவடிக்கை எடுக்​கப்​ப​டாத​தால், தாங்​கள் அனுப்​பிய தகவல்​களின் அடிப்​படை​யில் வழக்​குப்​ப​திவு செய்ய தமிழக டிஜிபிக்கு உத்​தர​விடக் கோரி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில், அமலாக்​கத் துறை​யின் சென்னை மண்டல உதவி இயக்​குநர் கிராந்தி குமார் வழக்கு தொடர்ந்​தார்.

அந்த மனு​வில், “அமலாக்​கத் துறை நடத்​திய விசா​ரணை​யில் 28 மணல் குவாரி​களில் அனு​ம​தியை மீறி 987 ஹெக்​டர் பரப்​புக்கு சட்​ட​விரோத​மாக மணல் அள்​ளப்​பட்​டுள்​ளது. இந்த மணலின் மதிப்பு ரூ.4,730 கோடி. ஆனால், ரூ.36.45 கோடி மட்​டுமே அரசுக்கு வரு​மானம் கிடைத்​துள்​ளது. சட்​ட​விரோத மணல் குவாரி மூலம் கிடைத்த தொகையை சட்​ட​விரோத​மாகப் பரி​மாற்​றம் செய்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது” என்று கூறப்​பட்​டிருந்​தது.

இந்த வழக்​கு, தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் முன் விசா​ரணைக்கு வந்​த​போது, “ஒரு விசா​ரணை அமைப்​பான அமலாக்​கத் துறை, மற்​றொரு விசா​ரணை அமைப்​பான மாநில காவல் துறைக்கு உத்​தர​விடக் கோரி எப்​படி வழக்கு தொடர முடி​யும்?” என்று நீதிப​தி​கள் கேள்வி எழுப்​பினர்.

அமலாக்​கத் துறை தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ரமேஷ், “சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற தடை சட்​டத்​தில் அதற்​கான அனு​மதி அமலாக்​கத் துறைக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது” என வாதிட்​டார். தமிழக அரசின் தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன், “உத்​தரப்​பிரதேசம், பிஹார் மற்​றும் குஜ​ராத் மாநிலங்​களில் தமிழகத்​தை​விட 4 மடங்கு அதிக மணல் கொள்ளை வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன. ஆனால் அந்த வழக்​கு​கள் மீது எந்த நடவடிக்​கை​யும் அமலாக்​கத் துறை எடுக்​க​வில்​லை. ஆனால் தமிழ்​நாடு மட்​டுமே அமலாக்​கத் துறை​யின் கண்​களுக்​குத் தெரி​கிறது.

டெல்லி மாநில காவல்​துறை சம்​பந்​தப்​பட்ட வழக்​கில் போலீ​ஸாருக்கு உத்​தர​விடக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் அமலாக்​கத் துறை இதே​போன்ற ஒரு வழக்கை தாக்​கல் செய்​திருந்​தது. எந்த அடிப்​படை​யில் உத்​தரவு பிறப்​பிக்க முடி​யும் என்று உச்ச நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பியதை அடுத்து அந்த மனுவை அமலாக்​கத் துறை திரும்​பப் பெற்​றது” என்று தலைமை வழக்​கறிஞர் தெரி​வித்​தார். இதையடுத்து இந்த மனுவுக்கு 3 வாரங்​களில் பதில் அளிக்​கும்​படி தமிழக அரசுக்கு உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை நீதிப​தி​கள்​ தள்​ளி​வைத்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x