Published : 01 Nov 2025 06:09 AM
Last Updated : 01 Nov 2025 06:09 AM
சென்னை: யோகா பயிற்றுநர் மற்றும் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். சென்னை வில்லிவாக்கம், சி.டி.எச். சாலையைச் சேர்ந்தவர் ரத்தினகுமாரி (48). இவர் சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் கடந்த 17-ம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில், “யோகாவில் பிஎச்டி முடித்துவிட்டு, யோகா கற்க ஆர்வமுள்ளவர்களுக்கு நான் பயிற்சி அளித்து வருகிறேன்.
2024 டிசம்பரில் முகநூலில் டாக்டர் சுரேந்தர் என்பவர், ஒரு வருட உணவியல் சான்றிதழ் படிப்பு வழங்குவதாகக் கூறிய விளம்பரம் செய்திருந்தார். இதைப்பார்த்து அவரை தொடர்பு கொண்டேன். அந்த நபர் தன்னை டாக்டர் சுரேந்தர் என்றும், விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரியும் உணவியல் நிபுணர் எனவும் அறிமுகம் செய்து கொண்டார்.
அவர் சென்னை நேரு ஸ்டேடியத்தில் அதிக சம்பளத்துடன் 3 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் யோகா பயிற்றுநர்களுக்கான வேலை பெற்றுத் தருவதாக உறுதியளித்து, ரூ.3.51 லட்சம் பெற்றுக் கொண்டார். ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திரும்பித்தரவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்” என புகாரில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து சென்னையில் வசிக்கும் தூத்துக்குடி மாவட்டம், சண்முகாபுரம், கிழக்குத் தெருவைச் சேர்ந்த சுரேந்தரை (30) கைது செய்தனர். விசாரணையில் அவர் மருத்துவர் இல்லை என்பதும், ஊட்டச்சத்து மற்றும் உணவியல் என்ற படிப்பில் பிஎச்டி-யை ஐதராபாத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆன்லைனில் படித்து வருவதும் தெரியவந்தது.
மேலும் அவர் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஊட்டச்சத்து ஆலோசகராகப் பணி செய்து வந்ததும் தெரியவந்தது. அப்போது, அறிமுகமான ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம், தான் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வேலை செய்வதாகவும், ஓட்டுநரின் உறவினருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2018-ல் ரூ.5 லட்சம் பெற்றுள்ளார்.
மேலும் அரும்பாக்கத்தில் அவர் வசித்து வந்த வீட்டு உரிமையாளரிடம் ரூ.3 லட்சமும், அதே பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவரிடமும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.13.76 லட்சமும் மோசடி செய்துள்ளார்.
கரோனா காலத்தில் வேலைஎதுவும் இல்லாததால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளி, கர்ப்பிணிகளுக்கு தானாகவே முன்வந்து ஊட்டச்சத்து ஆலோசனைகளை தன்னார்வலராக வழங்கியுள்ளார். அதன் பிறகு அவரது பெயருக்கு முன்னால் ‘டாக்டர்’ என சேர்த்துக் கொண்டு மோசடி செய்து, அந்தப்பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT