Published : 01 Nov 2025 06:04 AM
Last Updated : 01 Nov 2025 06:04 AM

நெல் மூட்டைகளை கொண்டு செல்லும் வாகன ஒப்பந்தத்தில் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை தேவை

சென்னை: ‘நெல் மூட்டைகளைக் கொண்டு செல்லும் வாகன ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை கிடங்குகள் மற்றும் அரவை நிலையங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட ஒப்பந்தம் மூலம் கடந்த ஆண்டில் ரூ.160 கோடி அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக என்றாலே விஞ்ஞான ஊழல்தான் என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு துறையிலும் ஊழல்கள் நடைபெற்று வருகின்றன. லாரிகளுக்கு ஒப்பந்தம் வழங்குவதன் மூலம் மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப் படுவதை அனுமதிக்க முடியாது. நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் போக்குவரத்து ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் கோரிக்கை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்கள், அரவைத் தொழிற்சாலைகள் மற்றும் பிற மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் லாரி போக்குவரத்து ஒப்பந்தத்தில் சுமார் ரூ.160 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனவே, லாரி போக்குவரத்து ஒப்பந்தத்தின் மீது எழுந்திருக்கும் முறைகேடு புகாரை விசாரிப்பதோடு, விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x