Published : 01 Nov 2025 06:21 AM
Last Updated : 01 Nov 2025 06:21 AM
சென்னை: ‘பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்று கூறப்படும் பகுதியில், எந்த கட்டுமானப் பணிகளை யும் மேற்கொள்ளக் கூடாது’ என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யவும், சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கி.மீ சுற்றளவுக்கு எந்த கட்டுமானப் பணிகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்றும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி ஜெ.பிரஷ்னேவ் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பான வரை படத்தை தாக்கல் செய்தார். தொடர்ந்து, சதுப்பு நிலப்பகுதியில் 1400 குடியிருப்புகள் கட்ட சிஎம்டிஏ அனுமதி வழங்கியது சட்ட விரோதம் என வாதிட்டார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “மனுதாரர் கூறும் ஒட்டுமொத்த பகுதியும் சதுப்பு நிலம் அல்ல. சம்பந்தப்பட்ட கட்டுமானம் அமையும் பகுதி சதுப்பு நிலத்துக்கு வெளியே உள்ளது.
சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சதுப்பு நிலத்தின் எல்லையை துல்லியமாக தீர்மானிப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தப் பணிகள் இன்னும் 2 வாரங்களில் முடிவடையும். தற்போது கட்டப்படும் கட்டிடத்துக்கு சுற்றுச்சூழல்தாக்க மதிப்பீட்டு ஆணையம், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் மட்டுமே சிஎம்டிஏ அனுமதி வழங்கியது” என தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வும் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவரங்கள் தெரியாமல் சிஎம்டிஏ இந்த கட்டுமானத்துக்கு அனுமதி வழங்கியது எப்படி?” என்று கேள்வி எழுப்பினர். மேலும், சதுப்பு நிலத்தின் எல்லையை துல்லியமாக வரையறுக்கும் பணிகள் முடிவடையும் முன், கட்டுமானங்களுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் அனுமதி அளித்து வந்தால் ஒட்டுமொத்த சதுப்பு நிலமும் அழிந்துவிடும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். அதைத்தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக நவ.12-க்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், அதுவரை குறிப்பிட்ட பகுதியில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என கட்டுமான நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT