Published : 01 Nov 2025 09:07 AM
Last Updated : 01 Nov 2025 09:07 AM
“திமுக ஆட்சி தொடரும் ஒவ்வொரு நாளும் அடுத்த தலைமுறைக்கு ஆபத்து. இந்த வெகுஜன விரோத ஆட்சியை நீக்குவதற்காக ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கிறோம்” என்று சொல்லும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, கரூர் சம்பவத்துக்குப் பிறகு, விஜய்க்கும் வக்காலத்து வாங்கி பேச ஆரம்பித்திருக்கிறார். இதுகுறித்தெல்லாம் ‘இந்து தமிழ் திசை’க்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து...
பாஜகவில் உங்களை விட ஜூனியர்கள் எல்லாம் மத்திய அமைச்சர், ஆளுநர் என ஒரு ரவுண்டு வந்துவிட்டார்கள். உங்களுக்கு இன்னும் அத்தகைய வாய்ப்புகள் அமையவில்லையே..?
நான் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு மையக்குழு உறுப்பினராகவும் இருக்கிறேன். கட்சி எனக்கு வேலை செய்யும் வாய்ப்பை கொடுத்திருக்கிறது. என்னை எந்த மாதிரி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தலைமை தான் முடிவெடுக்கும்.
உண்மையாக உழைப்பவர்களுக்கு பாஜகவில் பதவிகள் தரப்படுவதில்லை என்கிறார்களே..?
ஆரம்ப காலத்தில் இருந்து பாஜகவில் நிர்வாகியாக இருக்கிறேன். இதுவரை நான் பொறுப்பு இல்லாமல் இருந்தது கிடையாது. குறைந்தபட்சம் மாவட்ட தலைவராகவாவது இருந்திருக்கிறேன். நயினார் நாகேந்திரன் பாஜகவுக்கு வந்து 8 ஆண்டுகள் கழித்து இப்போது மாநில தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.
எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் வந்தவருக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டது என்றால் அது அண்ணாமலைக்குத்தான். ஏனென்றால், அவர் ஆக்டிவாக இருந்ததால் அவருக்கு மாநில தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. மாநில செயற்குழுவில் கூட 30 சதவீதம் பேர் புதியவர்களாக இருக்கவேண்டும் என கட்சி விதியிலேயே இருக்கிறது. ஆனால், அலங்காரத்துக்காக யாராவது பொறுப்பு வேண்டும் என எதிர்பார்த்தால் அவர்களுக்கு எதுவும் கிடைக்காது.
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு சவாலாகவும் தடையாகவும் எவை இருப்பதாக கருதுகிறீர்கள்?
ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பலமாக இருக்கும் மாநிலங்களில் பாஜக காலூன்ற சற்று தாமதமாகலாம். உதாரணம், கர்நாடகா, திரிபுரா மாநிலங்களைச் சொல்லலாம். இங்கெல்லாம் பாஜகவுக்கு இடம் கிடைக்க நாள் எடுத்தது. தற்போது, தமிழகத்தில் அந்த நிலையை கடந்து விட்டோம். எல்லா அமைப்புகளுக்கும் மூன்று நிலைகள் இருக்கும்.
ஒன்று, அந்த அமைப்பை உதாசீனப்படுத்துவது. இரண்டாவது, எதிர்ப்பது. மூன்றாவது, ஏற்பது. இந்த மூன்று நிலைகளைக் கடந்து தான் எந்த அமைப்பும் ஆட்சிக்கு வர முடியும். இதில், தமிழகத்தில் பாஜக இப்போது 2-வது நிலையில் இருக்கிறது. 2026-ல், ஏற்கும் நிலையில் பாஜகவின் வளர்ச்சி இருக்கும்.
நிர்மலா சீதாராமனை முதல்வராக அறிவிப்பார் அமித் ஷா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னதைக் கேள்விப்பட்டீர்களா?
ராகுல் காந்தியை பஞ்சாயத்து தலைவராக்க காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது என நான் பேசினால் ஏற்றுக்கொள்வார்களா? இது பீட்டர் அல்போன்ஸின் கற்பனை. எனது நீண்ட கால நண்பர் பீட்டர் அல்போன்ஸ். எனவே, இது பீட்டர் அல்போன்ஸின் உளறல் எனச் சொல்லி அவரை நான் அவமரியாதை செய்ய விரும்பவில்லை.
அதிமுக இப்போது அமித் ஷா திமுகவாகி விட்டது என்றெல்லாம் ஆளுங்கட்சி கூட்டணி கிண்டலடிப்பது பற்றி..?
பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு.
2026 சட்டசபை தேர்தலில் மக்கள் மன்றத்தில் பாஜக எதை பிரதானமாக முன்வைக்கப் போகிறது?
கடந்த 2021-க்கு முன்பு, அதிகமான போதைப் பொருள் பயன்பாடு கொண்ட மாநிலமாக பஞ்சாப் இருந்தது. இன்று தமிழகம் மாறி உள்ளது. தமிழகத்தில் கஞ்சாவைக்கூட பறிமுதல் செய்திருக்கிறார்கள். ஆனால், ஒரு கிராம் அளவுள்ள பவுடர் வகை போதைப் பொருளை தமிழக அரசு கைப்பற்றி இருக்கிறதா என ஆளுநர் கேட்டகேள்விக்கு முதல்வர் இதுவரை பதில் சொல்லவில்லை.
தமிழகத்தில் பள்ளிக்கூட வாசல்களில் பள்ளிக் குழந்தைகளுக்கு போதைப் பொருட்கள் விற்கப்படுகிறது. அவர்களை போதைக்கு அடிமையாக்கி வீட்டிலேயே முடக்கி, எதிர்கால தமிழ் சமுதாயத்தை அழிக்கும் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த தலைமுறையை காப்பாற்ற, நம் வீட்டு குழந்தைகள் போதைக்கு அடிமையாகாமல் தடுக்க திராவிட மாடல் அரசு தூக்கி எறியப்பட வேண்டும் என்ற முழக்கத்தை மக்கள் முன் வைத்து பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்.
பாஜகவை தனது கொள்கை எதிரி என்று சொல்லும் விஜய்யை நீங்கள் கூட்டணிக்கு அழைப்பது முரண் இல்லையா?
நான் எப்போதும் கூட்டணி பற்றி பேச மாட்டேன். ஆனால், கரூரில் மாநில காவல்துறை முழு தோல்வி அடைந்திருக்கிறது. அவர்கள் தான் விஜய்க்கு இடம் கொடுத்தார்கள். அதில் இருந்து மாறுபட்டு, விஜய்யே ஒரு இடத்தை தேர்வு செய்து, வீம்பு பிடித்து அங்குதான் பிரச்சாரம் செய்வேன் எனச் சொல்லியிருந்தால் விஜய் குற்றவாளி ஆகியிருப்பார்.
ஆனால், போலீஸ் அனுமதித்த இடத்தில் தான் விஜய் கூட்டம் நடத்தியிருக்கிறார். விஜய் தாமதமாக வந்தார் என முதல்வர் ஸ்டாலின் சட்டப் பேரவையிலேயே பொய் சொல்கிறார். எனவே, கரூர் பிரச்சினையின் அடிப்படையில் நாங்கள் விஜய்க்கு ஆதரவாக இருக்கிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT