Last Updated : 01 Nov, 2025 08:57 AM

 

Published : 01 Nov 2025 08:57 AM
Last Updated : 01 Nov 2025 08:57 AM

‘ஜெயங்கொண்டத்தைக் கொடுத்தால் ஜெயித்துக் காட்டுவோம்...’ - தெம்பாகக் கைதூக்கும் காங்கிரஸ் பார்ட்டிகள்!

க.சொ.க.கண்ணன், ஆ.சங்கர்

“பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இம்முறை எந்தத் தொகுதியையும் கூட்டணிக்கு ஒதுக்கக்கூடாது. இருக்கும் நான்கு தொகுதிகளிலும் நாம் தான் போட்டியிட வேண்டும்” - திமுக பாக நிலை முகவர்கள் கூட்டத்தில் திமுக எம்எல்ஏ ஒருவர் தான் அமைச்சர் கே.என்.நேருவிடம் இப்படியொரு தடாலடி கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம் தொகுதிகளும் உள்ளன. இந்த நான்கையுமே கடந்த முறை திமுக கூட்டணி தான் கைப்பற்றியது. இதில், குன்னம் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் தொகுதி. பெரம்பலூரில் திமுக-வைச் சேர்ந்த ம.பிரபாகரனும், ஜெயங்கொண்டத்தில் திமுக-வைச் சேர்ந்த க.சொ.க.கண்ணனும் வெற்றி பெற்றனர்.

அரியலூரை மதிமுக-வுக்கு விட்டுக் கொடுத்தாலும் அங்கு போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் கு.சின்னப்பாவும் உதயசூரியனில் தான் போட்டியிட்டார். அதனால், நான்கிலுமே உதயசூரியன் வென்றதாகத்தான் திமுக-வினர் பெருமை பேசுவார்கள்.

இந்த நிலையில், தங்களின் சிட்டிங் தொகுதியான அரியலூரை இம்முறையும் தங்களுக்கே கொடுத்தால் நல்லது என நினைக்கிறது மதிமுக. அப்படி ஒருவேளை மதிமுக-வுக்கே இம்முறையும் அரியலூர் ஒதுக்கப்பட்டாலும், இம்முறை அந்தக் கட்சி உதயசூரியனில் போட்டியிட சம்மதிக்குமா என்பது சந்தேகம்.

அதேசமயம், காலங்காலமாக அரியலூர் பகுதியில் வென்று வந்த தங்களுக்கு இம்முறை அந்தப் பாரம்பரியத்தின் அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் தொகுதியை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை முழக்கம் எழுப்ப ஆரம்பித்திருக்கிறது காங்கிரஸ்.

திமுக கூட்டணிக் கட்சிகள் இப்படியொரு திட்டத்துடன் தயாராகிக் கொண்டிருக்கையில், அண்மையில் அரியலூரில் நடந்த அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகளுக்கான திமுக பாக நிலை முகவர்கள், பாக டிஜிட்டல் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ-வான க.சொ.க.கண்ணன், “அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள 4 தொகுதிகளையும் கடந்த முறை திமுக வென்றது.

அதேபோல் 2026 தேர்தலிலும் நான்கு தொகுதிகளையும் திமுக-வுக்கே ஒதுக்க வேண்டும். எங்களின் விருப்பத்துக்கு மாறாக, போகிற போக்கில் கூட்டணி கட்சிகளுக்கு இதில் எந்தத் தொகுதியையும் ஒதுக்கிவிடாதீர்கள்” என்று அமைச்சர் நேருவிடம் கண்டிப்பான கோரிக்கை ஒன்றை வைத்தார்.

வழக்கமாக, அரியலூர் தொகுதியில் திமுக போட்டியிட்டால் ஜெயங்கொண்டத்தை கூட்டணிக் கட்சிக்கு கொடுத்துவிடும். அதேபோல், ஜெயங்கொண்டத்தில் போட்டியிட்டால் அரியலூரை கூட்டணிக் கட்சிக்குக் கொடுத்துவிடும். அப்படித்தான் கடந்த முறை அரியலூரை மதிமுக-வுக்கு கொடுத்தது திமுக.

கடந்த கால தேர்தல் வரலாறு இப்படி இருக்கையில் நான்கு தொகுதிகளிலுமே இம்முறை திமுக தான் போட்டியிட வேண்டும் என திமுக எம்எல்ஏ-வேகோரிக்கை வைத்திருப்பதும், அதை கட்சியின் முதன்மைச் செயலாளர் சிரித்துக் கொண்டே கடந்திருப்பதும் மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் முணு முணுப்பைக் கிளப்பி இருக்கிறது.

அரியலூர் தொகுதியில் 1989-க்குப் பிறகு உதயசூரியன் வெற்றிபெறவில்லை. அதன் பிறகு கடந்த தேர்தலில் தான் உதயசூரியனில் போட்டியிட்ட மதிமுக வெற்றிபெற்றது. அதேசமயம் திமுக கூட்டணியில் போட்டியிட்ட தமாகா-வும் காங்கிரஸும் முறையே 1996 மற்றும் 2006 தேர்தல்களில் அரியலூரில் வென்றுள்ளன. இதையெல்லாம் பட்டியல் போட்டு இம்முறை ஜெயங்கொண்டம் தொகுதியை எங்களுக்கு தரவேண்டும் என காங்கிரஸ் பார்ட்டிகள் கைதூக்க ஆரம்பித்திருக்கின்றன.

இதுபற்றி பேசிய அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆ.சங்கர், “1952 தொடங்கி தொடர்ச்சியாக அரியலூர் பகுதியில் ஏதாவது ஒரு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டு வந்துள்ளது. இதில், 1952, 1962, 1967, 2006 தேர்தல்களில் அரியலூரிலும், 1957, 1980, 1984, 1991 தேர்தல்களில் ஜெயங்கொண்டத்திலும் வெற்றியும் பெற்றுள்ளோம்.

கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளை மட்டுமே திமுக ஒதுக்கியது. அதனால், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் எங்களால் போட்டியிட முடியவில்லை. இம்முறை அந்தக் குறையை போக்க, எங்களுக்கு ஜெயங்கொண்டம் தொகுதியை கேட்டு திமுக தலைமையிடம் கட்டாயமாக வலியுறுத்துவோம். தொகுதியை எங்களுக்கு ஒதுக்கும் பட்சத்தில் திமுக கூட்டணியின் பலத்துடன் கண்டிப்பாக தொகுதியை ஜெயித்துக் காட்டுவோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x