Published : 01 Nov 2025 06:56 AM
Last Updated : 01 Nov 2025 06:56 AM
கோவை: போலி வாக்காளர்களை காலம் காலமாக உருவாக்கி வைத்துள்ளது திமுக என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அமைச்சர் நேரு மீது ரூ.888 கோடி ஊழல் தொடர்பான கடிதத்தை டிஜிபி-க்கு அமலாக்கத் துறை அனுப்பியுள்ளது. அமைச்சர் நேரு, அவரின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றும் 4 பேர் இணைந்து ஊழலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை.
பிஹார் தொழிலாளர்கள் விவகாரத்தில் தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுகவினரின் நடவடிக்கைகளைத்தான் பிரதமர் விமர்சித்துள்ளார். ஆனால், பிரதமர் சொல்லாத விஷயத்தை கூறியதாக தமிழக முதல்வர் திரித்துப் பேசியுள்ளார். தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நவ. 3-ம் தேதி தொடங்குகின்றன.
போலி வாக்காளர்களை காலம் காலமாக உருவாக்கி வைத்துள்ளது திமுக. எனவே, இந்திய தலைமை தேர்தல் அதிகாரி, தமிழக தேர்தல் அதிகாரிகளை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பதவி என்பது வெங்காயம் போன்றது. பதவி இருந்தால்தான் வேலை செய்ய வேண்டுமா? எனக்கு என் உயரம் தெரியும். பிரதமர் மீது நான் வைத்துள்ள நம்பிக்கை குறையவில்லை. நான் மாற்றத்துக்காக போராடுகிறேன். அமெரிக்க அதிபர் வரி விதிப்பால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பிரச்சினைகளை தீர்த்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT