Published : 01 Nov 2025 08:19 AM
Last Updated : 01 Nov 2025 08:19 AM
நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்காக கோடிக் கணக்கில் லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை தமிழக காவல் துறைக்கு கடிதம் எழுதி, விசாரிக்கச் சொல்லி இருக்கும் நிலையில், நகராட்சி நிர்வாகத் துறையின் அமைச்சர் கே.என்.நேரு, “என்னால் இந்த இயக்கத்துக்கும் தலைவருக்கும் எந்தக் கெட்ட பெயரும் ஏற்படாது என உருக்கமாகப் பேசியிருக்கிறார்.
திருச்சி மத்திய மற்றும் வடக்குமாவட்ட திமுக சார்பில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ ஆலோசனை கூட்டம் திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கூறியதாவது:
கிராமங்களில் 2002-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலையும், நகரங்களில் 2005-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலையும் கையில் வைத்துக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் போன்ற பணிகளை பார்க்க வேண்டும். வடமாநிலத்தைச் சேர்ந்த நிறையப் பேர் இங்கு வேலைக்கு வருகிறார்கள். தொடர்ந்து 3 மாதங்கள் ஒரே இடத்தில் தங்கியிருந்தால் அவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும். ஆனால், அவர்கள் இடம் மாறிக்கொண்டே இருப்பார்கள் என்பதால் அவர்களை பட்டியலில் சேர்க்கக்கூடாது என ஆட்சேபனை கொடுக்க வேண்டும்.
இஸ்லாமியர்கள் ஓட்டை தவிர்க்கப் பார்ப்பார்கள். அதில் ஒரு ஓட்டுக் கூட விட்டுவிடாமல் பார்க்க வேண்டும். அது நம்முடைய கடமை. நமக்கு யார் யாரெல்லாம் வாக்களிக்கிறார்களோ அவர்களை எல்லாம் தவிர்ப்பதற்கு தேர்தல் அலுவலர்கள் திட்டமிட்டால் தடுக்க வேண்டியது நமது கடமை. 100, 200 என மொத்தமாக வாக்காளர்களைச் சேர்த்தால் அதை நாம் தடுக்க வேண்டும். பெண்களின் வாக்குகள் ஒன்றுகூட தவறாமல் இடம்பெற செய்ய வேண்டும். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் நம்மிடம் வருவார்கள் என பழனிசாமி பேசிக்கொண்டே இருந்தார். ஆனால், எந்தக் கட்சியும் இங்கிருந்து செல்லவில்லை. திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது.
அதிமுக கூட்டணியில் இருந்த பாமக இரண்டாகப் பிளந்துள்ளது. தேமுதிகவின் நிலைப்பாடு இன்னும் தெளிவாகவில்லை. அதிமுக - பாஜக கூட்டணி பொருந்தாத கூட்டணியாக உள்ளது. இது நமக்கு மிகப்பெரிய சாதகம். அதை மேலும் சாதகமாக மாற்றப் பார்க்க வேண்டும். தற்போது ஏதேதோ பொய்யான குற்றச்சாட்டுகளை நம் மீது சுமத்துகிறார்கள். என்னால் திமுகவுக்கோ திமுக தலைவருக்கோ எப்போதும் எந்த கெட்ட பெயரும் ஏற்படாது. இவ்வாறு அவர் பேசினார்.
குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்: கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு “எங்களுக்குச் சொந்தமான இடத்தில் நடத்திய சோதனையின் போது சில ஆவணங்கள் கிடைத்ததாகவும், அது குறித்து ஆய்வு செய்யுமாறும் தமிழக போலீஸாருக்கு அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி தமிழக போலீஸார் அந்த ஆவணங்களை ஆய்வு செய்து முறைகேடு நடந்திருக்கிறதா என விசாரிப்பார்கள். ஆனால், நான் எவ்வித தவறும் செய்யவில்லை. திமுகவை மிரட்டிப் பார்ப்பதற்காகக்கூட இதுபோன்று அவர்கள் செய்யலாம். எனினும், விசாரணையில் நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT