Published : 01 Nov 2025 12:33 AM
Last Updated : 01 Nov 2025 12:33 AM
சென்னை: சென்னையை அடுத்த மறைமலை நகரில் ரூ.3,250 கோடி முதலீட்டில் 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், வாகன இன்ஜின் உற்பத்தி ஆலையை அமைப் பதற்காக ஃபோர்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலை யில் நேற்று கையெழுத்தானது.
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் தமிழகம் விளங்கி வருகிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான லைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-25-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030-ம் ஆண்டுக்குள் தமிழக பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வளர்ச்சி பெறவும், தேவையான முன்னெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2024-ல் அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், ஃபோர்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர்கள் உறுதியளித்தபடி, ஃபோர்டு நிறுவனம் ரூ.3,250 கோடி முதலீட்டில் 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அடுத்த தலைமுறை வாகன இன்ஜின் (Next-Gen Engine) உற்பத்தி திட்டத்தை மீண்டும் தொடங்க உள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
இந்த நிகழ்ச்சியில், துணைமுதல்வர் உதயநிதி, அமைச்சர்டிஆர்பி.ராஜா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், துறை செயலர் வி.அருண்ராய், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தாரேஸ் அகமது, ஃபோர்டு நிறுவனத்தின் உலகளாவிய இயக்குநர் மார்ட்டின் எவரிட், துணைத்தலைவர் மாத்யூ கோடிலூஸ்கிஉள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட வலைத்தளப் பதிவில்,‘முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது ஃபோர்டு நிறுவனம். மிக நீண்ட, நம்பிக்கைகொண்ட உறவினைப் புதுப்பிக்கும் வகையில் இந்த ஆற்றல்மிகு மீள்வருகை அமைந்துள்ளது. வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, ஆட்டோமொபைல் உதிரிபாகச் சூழலும் வலுவடையும். அடுத்த தலைமுறை இஞ்ஜின் களை உற்பத்தி செய்ய இந்தியாவின் ஆட்டோ மொபைல் தலைநகரத்தைத் தேர்வு செய்துள்ள ஃபோர்டின் முடிவானது, தமிழக தொழில்துறை வலிமைக்கும் உலக உற்பத்திச் சங்கிலியில் தவிர்க்க முடியாத இடத்துக்கும் மற்றுமொரு சான்றாக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT