Published : 31 Oct 2025 05:56 PM
Last Updated : 31 Oct 2025 05:56 PM
சென்னை: அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டார். இதனால் கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
இந்தக் காரணங்களால் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் (கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி) இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது? _ அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு கெடு விதித்தார். இதனால் அதிருப்தியடைந்த பழனிசாமி, செங்கோட்டையனின் கட்சிப் பொறுப்புகளை பறித்தார். இந்த நிலையில், நேற்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக மதுரை சென்ற செங்கோட்டையன், தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை திடீரென சந்தித்துப் பேசினார்.
பின்னர் இருவரும் ஒரே காரில் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு சென்றது பேசுபொருளாக மாறியது. பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மூவரும் சந்தித்து, சிறிது நேரம் ஆலோசனை செய்தனர். பின்னர் பசும்பொன் சென்ற மூவரும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
சசிகலாவுடன் ஆலோசனை: துரோகத்தை வீழ்த்தவும், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவும் அவர்கள் சபதம் செய்தனர். பின்னர் அங்கு வந்த சசிகலாவை, ஓபிஎஸ், செங்கோட்டையன் சந்தித்துப் பேசினர். ஆனால், டிடிவி.தினகரன் சசிகலாவை சந்திக்காமல் புறப்பட்டு சென்றார். இச்சம்பவம் நேற்று அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
செங்கோட்டையனின் செயல்பாடுகள் தொடர்பாக மதுரை கப்பலூரில் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் நேற்று பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதற்கு எந்த தயக்கமும் இல்லை. அதற்கு சில நடைமுறைகள் உள்ளன, பொறுத்து இருங்கள்” என்று தெரிவித்திருந்திருந்தார். இந்நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார் பழனிசாமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT