Published : 31 Oct 2025 04:37 PM
Last Updated : 31 Oct 2025 04:37 PM
புதுச்சேரி: மின் கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரி மாநில தலைவர் அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாநில தலைவர் அன்பழகன் தலைமையில், இன்று அக்கட்சியினர் உப்பளத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மின்துறை தலைமை அலுவலகம் முன்பு வந்தனர்.
அங்கு மின்கட்டண உயர்வை கண்டித்தும், அரசு அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். முன்னதாக பாதுகாப்பு கருதி மின்துறை தலைமை அலுவலகத்தின் இரு வாயில்களின் கிரில் கேட்களும் பூட்டப்பட்டன. மேலும், ஒதியஞ்சாலை ஆய்வாளர் செல்தில்குமார் தலைமையில் போலீஸாரும் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, திடீரென ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர், மின்துறை அலுவலக கேட்டை திறந்து போலீஸாரின் தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்றுள்ளனர். அவர்களை போலீஸார் தடுத்தபோது போலீஸாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. அவற்றையும் மீறி அலுவலக வளாகத்துக்குள் நுழைந்த அதிமுவினர் முதல் மாடியில் உள்ள மின்துறை தலைவர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் செல்லும் வழியில் போராட்டம் நடத்தியுள்ளனர். உடனடியாக அங்கும் வந்த போலீஸார் அவர்களை தடுத்துள்ளனர்.
மேலும், மின்துறை தலைவர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் கனியமுதனை சந்திக்க அதிமுக முக்கிய நிர்வாகிகளை மட்டும் அனுமதிக்குமாறு போலீஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்போது, இருவர் மட்டும் செல்ல போலீஸார் அனுமதிப்பதாக கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மற்ற அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸார், அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் 10 பேர் கண்காணிப்பு பொறியாளரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். உள்ளே சென்ற அவர்கள் மின்கட்டண உயர்வை திரும்பெற வேண்டும் என கண்காணிப்பு பொறியாளர் கமனியமுதனிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில செயலாளர் அன்பழகன், ”புதுச்சேரி மாநிலத்தில் லாபத்துடன் இயங்கும் மின்துறையை தனியார் மயமாக்காமல் மற்றும் மின் கட்டண உயர்வு விஷயத்தில் மிகப் பெரிய ஏமாற்றத்தை ஆளும் அரசானது மக்களுக்கு அளித்து வருகிறது.
தனியார் மயமாக்கலுக்கு முழுமையாக ஒப்புதல் அளித்த நிலையில் மூடி மறைக்கும் செயலில் அரசு ஈடுபட்டுக் கொண்டிருப்பது வெட்கக் கேடானது. தனியார் பயன்பெறும் விதத்தில் மின் கட்டணத்தை தாறுமாறாக ஒரு ஆண்டுக்கு இரண்டு, மூன்று முறை உயர்த்துவது வாக்களித்த மக்களை வஞ்சிப்பதாகும்.
மாநில மின் நுகர்வோரை அடிமைகள் போல் ஆளும் அரசு நடத்துகிறது. ஏற்கெனவே பல தலைப்புகளில் மறைமுக மின் கட்டண உயர்வினை மக்கள் மீது ஆளும் அரசு திணித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் அரசின் பரிந்துரையை ஏற்று இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியோடு தாறுமாறாக மின் கட்டணத்தை அரசு உயர்த்தியது. தற்போது மீண்டும் புதுச்சேரி ஆளும் அரசின் பரிந்துரையை ஏற்று மின் கட்டணம் உயர்வினை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து ஸ்லாப்புகளிலும் மின் கட்டணம் யூனிட்டுக்கு 20 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மின் வசூலில் 0- 100, 100- 200, 200- 300, 300-க்கு மேல் எவ்வளவு யூனிட் பயன்படுத்தினாலும் அது ஒரு ஸ்லாப் என மொத்தம் வீட்டு உபயோகத்தில் நான்கு ஸ்லாப்புகள் இருந்தன. அதை தற்பொழுது 300-ல் இருந்து 400 வரை தனி சிலாப்பாக மின்துறை மறைமுகமாக அறிவித்துள்ளது. மேலும் மின்கட்டணத்தில் நான்கு அடுக்கு முறை இருந்ததை 5 அடுக்கு முறையாக மாற்றம் செய்துள்ளது. இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் மிகப் பெரிய பாதிப்புக்கு ஆளாக்கப்படுவர்.
மின்துறையை ஏற்று நடத்தும் தனியார் பயன்பெறுகின்ற விதத்தில் சுமார் ரூ.400 கோடிக்கு மேல் மக்களுடைய வரிப் பணம் மீட்டர் மாற்றுவதற்கு அரசால் அனுமதிக்கப்பட்டு உள்ளது. தற்பொழுது அதே தனியார் எதிர்வரும் 5 காலத்தில் மின் கட்டணத்தை மனம் போன போக்கில் ஏற்றிக் கொள்வதற்கு அரசு இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதியும் பெற்றுள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வினை மானியமாக அரசு வழங்கும் என துறை அமைச்சர் அறிவித்துள்ளது மக்களை வஞ்சிக்கும் செயலாகும். ஏன் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் அதை ஏன் அரசு மானியமாக வழங்க வேண்டும்.
அந்த மானியம் இறுதி வரை மக்களுக்கு வழங்கப்படுமா அல்லது மின் கட்டண உயர்வுக்கான மானியத்தை அரசே வழங்க துணை நிலை ஆளுநர் ஏற்றுக்கொண்டு உள்ளாரா என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும். உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தையும் திரும்பபெற வேண்டும்” என்று அன்பழகன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT