Last Updated : 31 Oct, 2025 03:47 PM

3  

Published : 31 Oct 2025 03:47 PM
Last Updated : 31 Oct 2025 03:47 PM

ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன் இணைந்திருப்பது யாருக்கு பலம்? - நயினார் நாகேந்திரன் கருத்து

திருநெல்வேலி: ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் இணைந்திருப்பது யாருக்கு பலம் என்பது அவர்கள் விடும் அறிக்கையை பொறுத்துதான் தெரியும் எனவும், தமிழக முதல்வர் பிஹார் மக்களை தவறாக பேசியதைத்தான் பிரதமர் மோடி தனது உரையில் கூறினார் என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்

திருநெல்வேலி பாஜக மாவட்ட அலுவலகத்தில் இன்று மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறோம். உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதராக திகழ்கிறார்.

ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் மூவரும் சேர்ந்து பசும்பொன் சென்றார்கள். இது யாருக்கு பலம், யாருக்கு பலவீனம் என்பது அவர்கள் விடும் அறிக்கையை பொறுத்துதான் தெரியும். இப்போது அவர்களைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. அதிமுகவை பொறுத்தவரை அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

பிஹார் மக்களை திமுகவினர் துன்புறுத்துவதாக பிரதமர் கூறிய கருத்தை வைத்து தமிழ்நாட்டுக்கு அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாக நீங்கள் கேட்பது முற்றிலும் தவறு. ஏற்கெனவே தமிழக முதல்வர் பிஹாரிகளை பற்றி பேசியதைத்தான் பிரதமர் மோடி பேசி இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின்தான் பிரிவினையை தூண்டும் விதமாக பேசுகிறார். முதல்வர்தான் வந்தேறிகள் என பேசினார். எனவே முதல்வர் வட மாநிலம், தென் மாநிலம் என பிரிக்கும் சூழ்ச்சியில் ஈடுபட வேண்டாம். அவருக்கு தோல்வி பயம் வந்துள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர் பொய்யே பேசி வருகிறார்.

இந்த ஆட்சி பொய் சொல்லும் ஆட்சியாக உள்ளது. நகராட்சி நிர்வாகத் துறை, பணியாளர் நியமனத்தில் ஊழல் நடந்ததாக கூறப்படுகிறது அது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

கரூர் விவகாரத்தை பொறுத்தவரை இந்த ஆட்சி பழிவாங்கும் ஆட்சி. ஆளுங்கட்சி ஒரு மீட்டிங் நடத்த வேண்டும் என்றால் எங்கு வேண்டுமானாலும் நடத்தலாம், பள்ளிகளை மூடி கூட அவர்கள் நிகழ்ச்சி நடத்துவார்கள்” என்றார்.

தொடர்ந்து தவெகவுடன் பாஜக கூட்டணி அமைக்குமா என்பது குறித்து கேள்விக்கு, “கூட்டணியை பொறுத்தவரை தேர்தல் காலங்களில் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பர்களும் நிரந்தர பகைவர்கள் இல்லை. நாங்கள் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் ஆயிரம் கோடிக்கு கொண்டு வந்த திட்டங்கள் வெறும் அறிவிப்போடு நின்றுவிடும்” என்று கூறினார்.

தொடர்ந்து சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அப்போது திடீரென முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு உட்பட அதிமுக முக்கிய நிர்வாகிகளும் பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்தனர் அவர்களை நயினார் வரவேற்றார். பின்னர் அனைவரும் கூட்டாக அங்கிருந்த சர்தார் வல்லபாய் படேல் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x