Published : 31 Oct 2025 03:07 PM
Last Updated : 31 Oct 2025 03:07 PM
திருச்சி: “என்னால் திமுகவுக்கும், தலைவருக்கும் எந்த கெட்ட பெயரும் ஏற்படாது” என வாக்குச்சாவடி கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நகராட்சி நிர்வாக துறையில் அரசு பணி வழங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பது தொடர்பாக விசாரணையை தொடங்குமாறு தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பிய நிலையில், அமைச்சர் கே.என்.நேரு இவ்வாறு பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ ஆலோசனை கூட்டம் இன்று திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநகர செயலாளர் மேயர் மு.அன்பழகன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு பேசியது: “திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்.28-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். எம்எல்ஏக்கள், ஒன்றியச் செயலாளர்களுக்கான பணிகள் என்ன என்பதை அச்சிட்டு வழங்கப்படவுள்ளது.
கிராமங்களில் 2002 வாக்காளர் பட்டியலையும், நகரங்களில் 2005 வாக்காளர் பட்டியலையும் நாம் கையில் வைத்துக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளை பார்க்க வேண்டும். வடமாநிலத்தைச் சேர்ந்த நிறைய பேர் இங்கு வேலைக்கு வருகிறார்கள். வட மாநிலத்தவர்கள் 3 மாதங்களில் ஒரே இடத்தில் தங்கியிருந்தால் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்க முடியும். அதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபடுவார்கள். ஆனால், அவர்கள் இடம் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஆகவே அவர்களை பட்டியலில் சேர்க்கக் கூடாது என ஆட்சேபனை கொடுக்க வேண்டும்.
இஸ்லாமியர்கள் ஓட்டை தவிர்க்க பார்ப்பார்கள். அதில் ஒரு ஓட்டு கூட விட்டுவிடாமல் பார்க்க வேண்டும். அது நம்முடைய கடமை. நமக்கு யார் யாரெல்லாம் வாக்களிக்கிறார்களோ? அவர்களை எல்லாம் தவிர்ப்பதற்கு தேர்தல் அலுவலர்கள் திட்டமிட்டால் தடுக்க வேண்டியது நமது கடமை. 100, 200 வாக்காளர்களை மொத்தமாக சேர்த்தால் அதை நாம் தவிர்க்க வேண்டும். பெண்களுடைய வாக்குகள் ஒன்று கூட தவறாமல் இடம்பெற செய்ய வேண்டும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகள் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் நம்முடன் வருவார்கள் என பழனிசாமி பேசிக்கொண்டே இருந்தார் ஆனால், எந்தக் கட்சியும் இங்கிருந்து செல்லவில்லை. திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக இரண்டாக பிளந்து உள்ளது. தேமுதிகவின் நிலைப்பாடு தெளிவாகவில்லை. பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்திருந்தாலும் அது பொருந்தாத கூட்டணியாக உள்ளது. இது நமக்கு மிகப் பெரிய சாதகம். அதை மேலும் சாதகமாக மாற்ற பார்க்க வேண்டும்.
ஏதேதோ பொய்யான குற்றச்சாட்டுகளை நம் மீது சுமத்துகிறார்கள். என்னால், இந்த இயக்கத்துக்கும், திமுக தலைவருக்கும் எப்பொழுதும் எந்தக் கெட்ட பெயரும் ஏற்படாது” என்று பேசினார்.
விசாரணையில் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்: கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியது: “அமலாக்கத் துறை எங்களுக்கு சொந்தமான இடத்தில் நடத்திய சோதனையின்போது சில ஆவணங்கள் கிடைத்ததாக கூறியிருக்கிறது. அதுகுறித்து ஆய்வு செய்யுமாறு தமிழக போலீஸாருக்கு அமலாக்கத் துறை தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் தமிழக போலீஸார் அந்த ஆவணங்களை ஆய்வு செய்வார்கள்.
முறைகேடு நடந்ததா என்பதை போலீஸார் விசாரிப்பார்கள். ஆனால், நான் எந்தவித தவறும் செய்யவில்லை. திமுகவை மிரட்டி பார்ப்பதற்காகக் கூட இதுபோன்று அவர்கள் செய்யலாம். திமுகவில் மூத்த தலைவர்களை ஓரங்கட்டும் வேலையை யாரும் செய்யவில்லை. தேர்தல் நேரத்தில் எங்களை விமர்சிக்க எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. விசாரணையில் நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்.

அதிமுக கூட்டணியில் இருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை திமுகவின் பி டீம் எனக் கூறும் எடப்பாடி பழனிசாமி அவர் வாயில் வந்ததை பேசிக்கொண்டு உள்ளார். எஸ்ஐஆர் நேர்மையாக நடந்தால் சரியாக இருக்கும். ஆனால், வேண்டுமென்றே பல வாக்காளர்களை கொத்துக் கொத்தாக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும், நீக்குவதையும்தான் எதிர்க்கிறோம்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, நகராட்சி நிர்வாக துறையில் அரசு பணி வழங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அது தொடர்பாக விசாரணையை தொடங்குமாறு தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது. அதேவேளையில், நகராட்சி நிர்வாகத் துறையில் நேரடி நியமனத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும், அரசியல் உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புவதாகவும் அமைச்சர் கே.என்.நேரு கூறி வருவது கவனிக்கத்தக்கது.

இன்றையக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, கதிரவன், முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, பரணி குமார், மாவட்ட பொருளாளர் துரைராஜ், மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம், மத்திய மாவட்ட முன்னாள் துணை செயலாளர் குடமுருட்டி சேகர், ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT