Published : 31 Oct 2025 01:41 PM
Last Updated : 31 Oct 2025 01:41 PM
சென்னை: மொழிவாரி மாநிலம் அமைந்த நாளில் இன, மொழி, பண்பாட்டு, அரசியல் அடையாளங்களையும் உரிமைகளையும் பேணிக் காக்க உறுதிகொள்வோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மொழிவழி மாநிலமாகப் பிரிந்து 69ஆண்டுகள் ஆகிவிட்டன. 1948ஆம் ஆண்டு ஒன்றுபட்ட சென்னை மாகாண சட்டமன்றத்தில் மொழிவழி மாநிலப் பிரிவினையை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மொழிவழி மாநிலப் பிரிவினை பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட ‘தார் குழு’ 1948 செப்டம்பர் 13 அன்று சென்னைக்கு வந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரும் கருத்துக்களைத் தெரிவித்தனர். நாடு விடுதலை பெற்றதும் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கான கிளர்ச்சிகளும் வெடித்துக் கிளம்பின. ஆனால் பிரதமர் பண்டித நேரு இந்தியா முழுவதையும் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கும் திட்டத்தை அறிவித்தார்.
தட்சிணப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்குப் பிரதேசம், கிழக்குப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என்பனவாகும். இதில் ‘தட்சிணப் பிரதேசம்’ என்பது தமிழ்நாடு, கன்னடம், கேரளா, ஆந்திரம் ஆகிய நான்கு மாநிலங்கள் அடங்கியதாகும்.
இதனை ராஜாஜி மட்டுமே வரவேற்றார்; தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார்; அண்ணா கண்டனம் தெரிவித்தார். தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சியின் பெருமுயற்சியால் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் நின்று போராடின. பண்டித நேருவும் வேறு வழியில்லாமல் இத்திட்டத்தினைக் கைவிட நேர்ந்தது.
1953ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு சென்னை மாகாணத்தின் ஓர் அங்கமாகவே விளங்கியது. இந்தப் பலமொழிக் கூட்டில் சிக்கிக் கிடந்தவர்கள், தனியாக ‘விசால ஆந்திரம்’ வேண்டுமெனவும், ‘ஐக்கிய கேரளம்’ வேண்டுமெனவும் கோரிக்கை எழுப்பினர். இதற்காக ஆந்திர மகாசபை, கேரள சமாஜம் என அமைப்புகளை உருவாக்கி கட்சி சார்பின்றி ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தனர்.
இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் நாடு முழுவதும் மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போதைய சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் பிரிந்து சென்றன.
அவ்வாறு பிரிந்தபோது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகள் மீண்டும் தமிழகத்துடன் இணைக்க நடந்த போராட்டங்களில் பலர் ஈடுபட்டு உயிர்நீத்தும், சிறை சென்றும் தியாகம் செய்துள்ளனர். போராட்டங்களில் ஈடுபட்டு, தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் முதல் நாளை எல்லைப் போராட்ட தியாகிகள் நாளாக போற்றுகிறோம்.
1953 ஆந்திர மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். இதன் பிறகு நேருவின் மனம் மாறியது. நாடாளுமன்றத்தில் ‘ஆந்திர மாநிலம்’ அமைவதற்கான வாக்குறுதியை வழங்கினார். 25.3.1953 அன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப் பூர்வமான பிரகடனம் ஒன்றை வெளியிட்டார்.
இந்த மொழிவழி மாநிலப் போராட்டத்தில் தமிழகத்தைப் பொருத்தவரை தென் எல்லை மீட்புப் போராட்டமும், வட எல்லை மீட்புப் போராட்டமும் வரலாற்றில் இடம்பெற்றவை. தென் எல்லைப் போராட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்டது. இந்த வீரஞ்செறிந்த போராட்டத்தின் விளைவாகவே தெற்கு எல்லை ‘கன்னியாகுமரி’யாகவே நீடிக்கிறது. இதில் மார்ஷல் நேசமணியின் பங்கு மிகப் பெரியது.
வட எல்லைப் பாதுகாப்புக்குழு ம.பொ.சி. தலைமையில் அமைக்கப்பட்டது. 1956 அக்டோபர் 13 அன்று ‘தமிழ்நாடு’என சென்னை மாகாணத்திற்கு பெயர் சூட்டக் கோரி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். இந்தியா பல மொழி, பல இனமக்கள் கூடிவாழும் கூட்டாட்சி நாடுதான் என்பதை மொழிவழி மாநிலப் பிரிவுகள் உறுதிசெய்கிறது.
எனவே மொழி வழி மாநிலமாக சென்னை மாகாணம் தமிழர் தாயக நிலப்பரப்பு என்று பிரகடனம் செய்யப்பட்ட நவம்பர் ஒன்றாம் தேதியை தமிழக பெருவிழாவாக கொண்டாடுகிறோம். சென்னை மாகாணத்திற்கு அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்ட 1967 ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய நாளை “தமிழ்நாடு நாளாக“கொண்டாடுகிறோம்.
நவம்பர் 1 ஆம் தேதி தமிழக பெருவிழா கொண்டாடப்படும் நேரத்தில் தமிழர்களின் மொழி, இன, பண்பாட்டு அரசியல் அடையாளங்களை பேணி பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT