Published : 31 Oct 2025 06:10 AM
Last Updated : 31 Oct 2025 06:10 AM
சென்னை: நில அளவையர் காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றியம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது: தமிழகத்தில் 6 கோடிக்கு மேல் உள்ள பட்டாதாரர்களின் நிலங்கள் மனைகளை அளக்க வேண்டிய பொறுப்பு 3999 சர்வே அலுவலர்களைச் சாரும்.
இதிலும் துணை ஆய்வாளர் முதல் கூடுதல் இயக்குநர் வரை உள்ள மேற்பார்வை, நிர்வாக நிலைஅலுவலர்கள் நீங்கலாக 3517 பேரில் காலிப் பணியிடங்கள் 1375 போக மீதமுள்ள2142 சர்வே ஊழியர்கள் மட்டும்தான் இந்தபெரும் பணியை செய்ய வேண்டியுள்ளது.
மேலும் கணினிமயமாக்கம் மூலம் துறையின் நடவடிக்கைகள் இணையவழிக்கு மாறியபோதும், கைப்பிரதிகளை தயார் செய்வதும் அதனை இணைய வழியில் பதிவேற்றம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் உருவாயிற்று. இச்சூழல் சர்வேயர்களின் பணியை இரட்டிப்பாக்கியுள்ளது. புதிய பணிகள் வழங்கப்பட்டாலும் புதிய பணியிடங்கள் ஏதும் ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில், வெளி முகமை மூலம் 592 பணியாளர்கள் ஜிஎஸ்டி செலுத்தி கூலி பெறும் நிலையை அரசு உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் கிடப்பில் உள்ளன. அரசின் இந்த அணுகுமுறை, போராட்டத்துக்கு வலுக்கட்டாயமாக உந்தி தள்ளுவதாகவே நாங்கள் உணர்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT