Published : 31 Oct 2025 09:11 AM
Last Updated : 31 Oct 2025 09:11 AM
பாமகவுக்கு செல்வாக்கு மிக்க மாவட்டங்களில் சேலம் பிரதானமாக உள்ளது. இங்கு, மேட்டூர் பாமக எம்எல்ஏ-வாக சதாசிவமும், சேலம் மேற்கு பாமக எம்எல்ஏ-வாக அருளும் இருந்து வருகின்றனர். இதில், ராமதாஸுக்கு ஆதரவாக அருளும், அன்புமணிக்கு ஆதரவாக சதாசிவமும் கொடிதூக்கி நிற்கிறார்கள். இந்த நிலையில், சேலத்தில் தங்களது இருப்பைத் தக்கவைக்க அண்மையில் அங்கே, ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தை நடத்தினார் ராமதாஸ்.
அந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், “பாமக இளைஞரணிக்கு தளபதியாக தமிழ்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து இளைஞர்களும் அவருக்கு துணை நிற்க வேண்டும். பாமக இளைஞரணி அவரை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாமகவுக்கு சேவை செய்யவே எனது பெரிய மகளை செயல்தலைவராக தந்துள்ளேன்” என்று சொன்னதுடன், “பாமக சார்பில் 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு போராட்டம் டிசம்பர் மாதம் நடைபெறும்” என போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டார்.
ராமதாஸ் இப்படிக் கூட்டம் போட்டு பேசிய அடி மறைவதற்குள் அன்புமணியும் கடந்த 28-ம் தேதி தொடங்கி தனது நான்கு நாள் சுற்றுப்பயணத்தை சேலம் மாவட்டத்தில் தொகுதி வாரியாக மேற்கொண்டு வருகிறார். கடந்த 29-ம் தேதி எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட ஆவணியூர் திருமலை நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, “10.5 சதவீத உள் இடஒதுக்கீடு கேட்டு டிசம்பர் 17-ம் தேதி எனது தலைமையில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும்” என தந்தைக்குப் போட்டியாக அறிவித்தார்.
தந்தையும் தனயனும் சேலம் மாவட்டத்தை தங்களின் பலத்தை சோதிக்கும் களமாக மாற்றி வருவதால் இரண்டு தரப்பிலும் ஆதரவு திரட்டும் பணிகள் மும்முரமாகி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT