Published : 30 Oct 2025 02:12 PM
Last Updated : 30 Oct 2025 02:12 PM
கரூர் துயரத்துக்குப் பின்னர் எல்லா அரசியல் நகர்வுகளையும் நிறுத்தி வைத்திருந்த தவெக, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக செயல்பட ஆரம்பித்துள்ளது. மீண்டும் எப்போது விஜய் வெளியில் வருவார் என்பதே இப்போதைய பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்தது விஜய்யை மட்டுமல்ல, தவெகவையும் ஒரு மாதத்துக்கும் மேலாக முடக்கிப் போட்டு வைத்துள்ளது. என்னதான் அரசு மீதும், காவல் துறை மீதும் விஜய் தரப்பு குறைகளை அடுக்கினாலும், தங்கள் தரப்பின் மீது குறைகளையும் இப்போது ஆராய தொடங்கியுள்ளது தவெக தலைமை.
கரூர் துயரம் நடந்தபோது விஜய் எவ்வாறு செயல்பட்டிருக்க வேண்டும், தவெக நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட்டிருக்க வேண்டும், இப்போதைய சூழலில் தவெக மற்றும் தன்னை பற்றிய மக்களின் மனநிலை என்ன என்பது குறித்தெல்லாம் முக்கிய ஆலோசனைகளை விஜய் நடத்த ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தச் சூழலில்தான் சமீபத்தில் முக்கிய தலைமை நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனைகளை கேட்டுள்ளார் விஜய். மேலும், கரூர் நிகழ்ச்சி ஏற்பாடுகள், கரூர் கூட்ட நெரிசல் மற்றும் அதனை எதிர்கொண்ட விதம் குறித்து பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை விஜய் கடுமையாக சாடியதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமியிடமும் தனது ஆதங்கங்களை விஜய் வெளிப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தவெக விஜய் தலைமையில் இயங்கினாலும், விஜய்யின் கீழ் உள்ள புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் தனித்தனி குழுக்களை வைத்துக்கொண்டு செயல்படுவதாகவும் விஜய்க்கு புகார்கள் பறந்துள்ளன. இந்த உள்கட்சி குழப்பங்களால் நிர்வாகிகளின் செயல்பாட்டில் பெரும் பின்னடைவுகள் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இதன் அடிப்படையிலும் அவர்களிடம் விஜய் பேசியதாக சொல்லப்படுகிறது.
இனியும் அருகில் உள்ள சிலரை மட்டுமே நம்பினால் கட்சியை முட்டுச்சந்தில் நிறுத்திவிடுவார்கள் என்று பயந்துபோனதால்தான், விஜய் இப்போது 28 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை அமைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக நவம்பர் 5-ல் சிறப்பு பொதுக்குழுவையும் கூட்டவுள்ளார்.
விஜய்யின் அடுத்த நகர்வு என்ன?
கடைசியாக செப்டம்பர் 27-ல் கரூரில் விஜய் பேசியதுதான், அதன்பின்னர் இப்போதுவரை ஒரு பொது நிகழ்விலும் விஜய் கலந்துகொள்ளவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாக கட்சியின் உள்கட்டமைப்பு பணிகள், மக்கள் சந்திப்பு பணிகள் போன்ற எதுவுமே இல்லாமல் முடங்கி கிடக்கிறது. இப்படியே செல்வது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என நினைக்கிறார் விஜய். இதனால்தான், நிர்வாகிகள் குழு, பொதுக்குழுவில் முக்கிய முடிவுகளை எடுக்க தயாராகி வருகிறார்.
சிறப்பு பேருந்தில் நடத்திய ‘ரோடு ஷோ’ ஃபார்மேட் தோல்வியை சந்தித்த நிலையில், அடுத்தகட்டமாக மக்களை சந்திப்பது எப்படி?, பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?, காவல் துறையின் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது எப்படி?, கட்சியின் உள்கட்டமைப்பு, தேர்தலுக்கான திட்டம் என எல்லா வகையிலும் இப்போது ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார் விஜய்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசியல் கட்சிகளின் பேரணிகள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டுதல்களை வகுத்து வருகிறது. அது இறுதிசெய்யப்பட்டவுடன்தான் இனி விஜய்யால் பேரணிகளை நடத்த முடியும். எனவே, கட்சியை உயிர்ப்புடன் அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல எந்த மாதிரியான விஷயங்களை செய்யலாம் என்றும் யோசித்து வருகிறது தவெக. இப்படி எல்லாவகையிலும் பக்காவான திட்டங்கள் தீட்டப்பட்ட பின்னர்தால் விஜய் வெளியில் வருவார் என்றும் தகவல் வெளியாகின்றன.
கரூர் துயரத்துக்கு பின்னர் சென்னைக்கு ஓடிவிட்டார், ஒரு மாதமாக பனையூரிலே பதுங்கிக் கொண்டார், பாதிக்கப்பட்டவர்களை கூட நேரில் சந்திக்காமல் சென்னை அழைத்து வந்து பார்த்தார் என்பன போன்ற குற்றச்சாட்டுகள் பரவலாகவே விஜய் மீது வைக்கப்படுகிறது. அந்த விமர்சனங்களை எவ்வாறு உடைப்பது என்பது பற்றியும் நிர்வாகிகளிடம் விஜய் ஆலோசித்து வருகிறார் என சொல்லப்படுகிறது.
விஜய் இப்போது நடத்தும் ஆலோசனைகளில் முக்கிய பேசுபொருளாக கூட்டணி குறித்த கேள்வி உள்ளது. விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க அதிமுக எல்லா வகையிலும் முயற்சித்து வருகிறது. ஆனால், இப்போதுவரை அதிமுக - பாஜக கூட்டணிக்கு விஜய் தரப்பு ஓகே சொல்லவில்லை என்ற தகவல்களும் கசிகின்றன.
முதல் மாநாடு, இரண்டாம் மாநாடு, மாநில சுற்றுப் பயணம் என டாப் கியரில் பறந்த விஜய்யின் அரசியல் இப்போது, பெரிய ‘வேகத்தடை’யில் சிக்கி தத்தளிக்கிறது. தடைகளை தகர்த்து இனி விஜய் எப்போது வெளியில் வருவார் என்பதே தவெக தொண்டர்களின் மனநிலையாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT