Published : 30 Oct 2025 06:45 AM
Last Updated : 30 Oct 2025 06:45 AM
சென்னை: விரைவில் நியமிக்கப்பட உள்ள 1,429 சுகாதார ஆய்வாளர்கள் (கிரேடு-2) பணிக்கு நவம்பர் 16-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலைப் பணியின்கீழ் வரும் சுகாதார ஆய்வாளர் (கிரேடு-2) பதவியில் 1,429 காலி இடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பதாரர் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுடன் பிளஸ் 2 முடித்து, அதோடு தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குநரால் வழங்கப்பட்ட 2 ஆண்டு கால பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் சான்றிதழ் அல்லது சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டியது அவசியம்.
பொதுப் பிரிவினர் உள்ளிட்ட அனைத்து வகுப்பினருக்கும் வயது வரம்பு கட்டுப்பாடு ஏதும் கிடையாது. கட்டாய தமிழ் மொழி தகுதித் தாள் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.
கரோனா காலகட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு, பணிக்காலத்துக்கு ஏற்ப 2 முதல் 5 சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும். எனவே, தகுதி உள்ள ஆண்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக நவம்பர் 16-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். போட்டித் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT