Published : 30 Oct 2025 06:32 AM
Last Updated : 30 Oct 2025 06:32 AM
சென்னை: கோயில் நிலங்களை இணையத்தில் வெளிப்படையாக பதிவேற்றம் செய்வதற்கு அறநிலையத் துறை தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, இதுதொடர்பாக விரிவாக பதில்மனு தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவி்ட்டார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள், மடங்கள், கட்டளைகளுக்கு சொந்தமாக உள்ள சொத்துகள், நிதி மற்றும் நிலங்கள் தொடர்பான, அறநிலையத் துறையின் உத்தரவுகள், அரசாணைகள், டெண்டர் அறிவிக்கைகளை இணையத்தி்ல் வெளிப்படையாக வெளியிடக்கோரி ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரான மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பி்ல் வழக்கறிஞர் பி.ஜெகந்தாத், அறநிலையத் துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், மாநில தகவல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் விக்னேஸ்வரன் சந்திரசேகர் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அப்போது அறநிலையத்துறை தரப்பில், ‘‘கோயில் நிலங்கள் தொடர்பான ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தால் அதன்மூலமாக முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. ஏற்கெனவே வருவாய்த் துறையின் தமிழ் நிலம் என்ற இணையதளம் வாயிலாக தமிழகத்தில் உள்ள நிலங்களின் வகைப்பாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிய முடியும்” என தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை இணையத்தில் வெளிப்படையாக பதிவேற்றம் செய்வதற்கு அறநிலையத் துறை தயங்குவது ஏன்? சொத்துகள் தொடர்பான விவரங்களை பதிவேற்றம் செய்வதில் என்ன சிக்கல் உள்ளது? கோயில் சொத்துக்களை எல்லோரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் அறிவி்த்தால் நிலங்களை வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருப்பார்களே? மனுதாரர் கோரியுள்ள விவரங்களில் தணிக்கை அறிக்கைகளும் அடங்கும்.
அவற்றை வெளியிடுவதில் என்ன பிரச்னை உள்ளது? அறநிலையத் துறை ஆணையரின் தனிப்பட்ட விவரங்களை ஒன்றும் மனுதாரர் கோரவில்லையே” என கேள்வி எழுப்பினார். பின்னர் மனுதாரர் கோரியுள்ள அனைத்து விவரங்களும் சட்டரீதியாக பொது ஆவணங்கள். அவற்றை வெளியிட முடியாது என மறுக்க முடியாது. எனவே எந்தெந்த தகவல்கள் பதிவேற்றம் செய்ய முடியும், எவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான பதில்மனு தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் நவ.12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். பதில் மனுவை முன்கூட்டியே மனுதாரருக்கும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT