Published : 30 Oct 2025 09:42 AM
Last Updated : 30 Oct 2025 09:42 AM
தேர்தலில் எங்கள் உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பது இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி ஆதங்கப்பட்டு திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பல தொகுதிகளில் எங்கள் கட்சி முக்கிய சக்தியாக உள்ளது. அதிமுக, திமுகவில் உள்ள சிலருக்கு எங்கள் வளர்ச்சி அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். ஆனால், உழைப்புக்கு ஏற்ற பலன் எங்களுக்கு கிடைப்பது இல்லை. ஒவ்வொரு முறையும் தொகுதி பங்கீட்டின்போது சிக்கல் ஏற்படுகிறது. அதற்காக திமுக கூட்டணியில் இருந்து நாங்கள் விலகுவோம் என்று அர்த்தம் இல்லை.
பாஜகவை கருத்தியல் ரீதியாக எதிர்ப்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னணியில் நிற்கிறது. தமிழகத்தில் தேர்தலில் போட்டியிட்டு நேரடியாக ஆட்சி அதிகாரத்துக்கு வரமுடியாது என்பதால் குறுக்கு வழியில் முகமூடி அணிந்து ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் 2-வது பெரிய கட்சியாக மாற பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. பாஜகவை அதிமுக தொடர்ந்து ஆதரித்தால் நிச்சயம் எதிர்காலத்தில் அதிமுக 3-வது இடத்துக்குச் சென்றுவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT