Published : 30 Oct 2025 04:14 AM
Last Updated : 30 Oct 2025 04:14 AM
சென்னை: நகராட்சி நிர்வாக துறையில் அரசு பணி வழங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அது தொடர்பாக விசாரணையை தொடங்குமாறு தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி உள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தின் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆர் அடிப்படையில் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் அந்நிறுவனம் தொடர்புடைய சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள், ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த சோதனையில் வங்கி மோசடி தொடர்பான ஆவணங்களோடு வேறு சில முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களும் சிக்கின. அதில், ஒன்று தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் கடந்த 2024-2025 மற்றும் 2025-2026-ல் 2,538 அரசு பணி நியமனத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பானதாகும்.
இந்த பணிகளுக்கான நியமன கடிதங்கள் தமிழக முதல்வரால் கடந்த ஆக.6-ம் தேதி வழங்கப்பட்டது. அதாவது 2,538 பேரில் 150 பேர் பணியின் தன்மையை பொறுத்து தலா ரூ.25 முதல் ரூ.35 லட்சம் லஞ்சம் கொடுத்து அரசு வேலை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதில், அதிகாரமிக்க அரசியல்வாதிகளும், அவர்களுக்கு நெருக்கமான நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.
நகராட்சி நிர்வாகத் துறையால் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆள் தேர்வின் மூலம் லஞ்சம் கைமாறப்பட்டுள்ளது. இதில், தொடர்புடையவராக சந்தேகிக்கப்படுபவர்களின் பெயர்கள் அடங்கிய ஆவணங்கள், இதற்கு மூளையாக செயல்பட்டவர்களின் விவரங்கள், புகைப்படங்கள், பணப்பரிவர்த்தனைகள் போன்ற அனைத்து ஆதாரங்களையும் 232 பக்க கடிதத்துடன் இதில் இணைத்துள்ளோம்.
லஞ்சமாக பெறப்பட்ட பணம் ஹவாலா நெட்வொர்க்குகளை பயன்படுத்தி மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான தேர்வர்கள் ஏமாற்றப்பட்டு, வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். ஒரு சில தனிநபர்களுக்கு எதிராக வேறு ஒரு வழக்கில் விசாரணை மேற்கொண்ட போது, தற்செயலாக இந்த ஆதாரங்கள் சிக்கி உள்ளன. எனவே, இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள மேலும் பலரை கண்டறிய விரிவான விசாரணை தேவை. தமிழக டிஜிபி இந்த முறைகேடு தொடர்பாக விசாரணையை விரைவில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கடந்த ஏப்ரல் மாதம் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT