Published : 30 Oct 2025 03:45 AM
Last Updated : 30 Oct 2025 03:45 AM

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு அதிமுக, பாஜக ஆதரவு; திமுக, காங்கிரஸ் எதிர்ப்பு

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தினார். திருத்தப் பணிகளுக்கு அதிமுக, பாஜக ஆதரவு தெரிவித்த நிலையில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 10 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2002-04 காலகட்டத்தில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு, பிஹார் மாநிலத்தில் சமீபத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடத்தப்பட்டது.

இந்த நிலையில், 2026 தொடக்கத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கத்திலும் 2027-ம் ஆண்டில் உத்தர பிரதேசம், குஜராத், கோவாவிலும், 2028-ம் ஆண்டில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அந்தமான் - நிகோபர், லட்சத்தீவிலும் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மேற்கண்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 27-ம் தேதி வெளியிட்டது. 28-ம் தேதி இப்பணி தொடங்கியது. இதன் முதல்கட்டமாக, அக்.28 முதல் நவ.9-ம் தேதி வரை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நவ.4 முதல் டிச.4 வரை அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர். டிச.9-ல் வரைவுப் பட்டியல் வெளியிடப்படுகிறது. டிச.9 முதல் 2026 ஜன.8 வரை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. டிச.9 முதல் ஜன.31 வரை பட்டியலில் பெயர் நீக்கம் தொடர்பான நோட்டீஸ் வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.7-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டப்பிரிவு செயலாளர் என்.ஆர்.இளங்கோ, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், ஐ.எஸ்.இன்பதுரை எம்.பி., பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, மாநில பொதுச் செயலாளர் டி.செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, வகிதா நிஜாம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாநில குழு உறுப்பினர்கள் ஆறுமுகநயினார், சாமுவேல்ராஜ் மற்றும் தேமுதிக, விசிக, நாம் தமிழர், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அப்போது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கினார். வீடு வீடாக ஆய்வு செய்து படிவம் வழங்குதல், அவற்றை பூர்த்தி செய்து மீண்டும் பெறுதல், இதற்கான அவகாசம், பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்கான நடைமுறை, பெயர் நீக்கப்படும் போது நோட்டீஸ் வழங்குதல் போன்ற பல்வேறு நடைமுறைகள் குறித்து விளக்கினார்.

இதைத் தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இதில், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஆதரித்து கருத்து தெரிவித்தனர். சிறப்பு திருத்த பணிகளுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட மற்ற 10 கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

‘பருவமழை, பண்டிகை காலத்துக்கு நடுவில் இந்த பணி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். பிஹாரில் நடத்திய தவறை தமிழகத்தில் செய்யக்கூடாது. நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது’ என்று தெரிவித்துள்ளனர். இது கடைசி தேர்தலாக
இருக்கும் என அஞ்சுவதாக கம்யூனிஸ்ட் கட்சிகளும், தமிழகத்துக்குள் வாக்காளர்களாக வட மாநிலத்தவரை திணிக்கும் நடவடிக்கை என்று நாம் தமிழர் கட்சியும் கருத்து தெரிவித்துள்ளன.

இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகள் சார்பில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை அர்ச்சனா பட்நாயக் பெற்றுக் கொண்டார்.

இதேபோல, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையிலும், சென்னையில் மாநகராட்சி ஆணையர் தலைமையிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அங்கு உள்ளூர் நிலவரங்கள் அடிப்படையில் பல்வேறு கோரிக்கைகள், பரிந்துரைகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் அரசியல் கட்சியினர் வழங்கியுள்ளனர்.

77 ஆயிரம் பேருக்கு பயிற்சி: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முதல் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் என 77 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகளால் இந்த பயிற்சிகள் அளிக்கப்படும் என்று அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x