Published : 29 Oct 2025 07:44 PM
Last Updated : 29 Oct 2025 07:44 PM
தஞ்சாவூர்: விளையாட்டை வெறும் விளையாட்டுதான் என கருதாமல், அதையும் வாழ்க்கை மேம்பாட்டுக்காக மாற்ற வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில், தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் மாநில அளவிலான 66வது குடியரசு தின தடகள போட்டியின் தொடக்க விழா இன்று (அக்.29) நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். எம்.பி. க்கள் கல்யாண சுந்தரம், முரசொலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக முதன்மை கல்வி அலுவலர் (பொ) மாதவன் வரவேற்றார். போட்டியின் தொடக்கமாக கொடியேற்றப்பட்டு, மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்று போட்டிக்கான ஜோதி ஏற்றி வைத்து, சிறப்புரையாற்றி போட்டிகளை தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் தமிழகத்தின் 38 மாவட்டங்கள் மற்றும் தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.
முதல் 3 நாட்கள் மாணவிகளுக்கும், அடுத்த 3 நாட்கள் மாணவர்களுக்கும் போட்டிகள் நடைபெற உள்ளது. இவ்விழாவில் எம்எல்ஏ-க்கள் துரை.சந்திரசேகரன், சாக்கோட்டை அன்பழகன், அண்ணாதுரை, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது: “மாநில அளவிலான 66வது குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்திய அளவில் விளையாட்டுக்கான தலைமை இடமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்காக துணை முதல்வர் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரது முயற்சியால் நடைபெறும் இப்போட்டியில் 6,358 பேர் பங்கேற்கின்றனர்.
இதில் இன்று (அக்.29) முதல் மாணவிகளுக்கும், நவ.1ம் தேதி முதல் மாணவர்களுக்கும் போட்டிகள் நடைபெறு கின்றன. குடியரசு தின தடகளப் விழா போட்டிகள், பாரதியார் பிறந்த நாள் விழா போட்டிகள் என எந்த போட்டிகளாக இருந்தாலும் துணை முதல்வரின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொள்கின்றனர்.
இதன் மூலம் பல பேர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். மேலும் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர். இவர்களைப் பள்ளிக் கல்வித் துறைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. விளையாட்டு வீரர்களை அரசு வேலையில் அமர்த்தும் அளவுக்கு துணை முதல்வர் பணியாற்றி வருகிறார். விளையாட்டை வெறும் விளையாட்டுதான் என கருதாமல், அதையும் வாழ்க்கை மேம்பாட்டுக்காக மாற்ற வேண்டும் என்கிற தமிழக முதல்வரின் வாக்கை நிரூபிக்கும் விதமாக இப்போட்டி நடைபெறுகிறது" என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT