Published : 29 Oct 2025 07:22 PM
Last Updated : 29 Oct 2025 07:22 PM
சென்னை: நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன. தமிழக பொறுப்பு டிஜிபி இந்த ஊழலில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்காமல் நடுநிலையோடு வழக்கு பதிய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் eடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ‘எங்கும் ஊழல் - எதிலும் ஊழல்’ என்று ஊரை அடித்து, உலையில் போடும் இந்த திமுக ஆட்சியின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு புதிய ஊழியர்களை நியமிக்க நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் சுமார் 800 கோடி ரூபாய்க்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையும், அமலாக்கத் துறையும் நடத்திய சோதனைகளின் விளைவாக இந்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது. 'JOB RACKET ' முறையில் நடைபெற்ற இந்த ஊழலில் திமுக அரசின் இந்த துறை அமைச்சர் கே.என்.நேரு
மற்றும் அவரது சகோதரர்களின் நிறுவனங்கள், அதிகாரிகள் இணைந்து வேலை வாய்ப்புக்காக முயற்சித்தவர்களிடம் 25 லட்சம் முதல் 35 லட்சம் வரை லஞ்சம் வசூலித்ததாகவும், அந்த பணத்தை ஒருசில நிறுவனங்கள் மூலம் சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த இமாலய ஊழல் 2024-25 மற்றும் 2025-26 ஆகிய காலாக்கட்டங்களில் நடைபெற்றதையும், இது தொடர்பாக கிடைத்த பல ஆவணங்களை அமலாக்கத்துறை தமிழக காவல்துறை டிஜிபி-க்கு அறிக்கையுடன் சமர்ப்பித்து, ஊழலில் ஈடுபட்டுள்ளவர்களின் விவரங்களும் இணைக்கப்பட்டு, இந்த அறிக்கையின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது.
தமிழக காவல்துறை இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால்தான் தங்களால் சட்ட விரோத பண பரிமாற்றச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தமிழக காவல்துறை பொறுப்பு டிஜிபி இந்த ஊழலில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்காமல் நடுநிலையோடு முதல் தகவல் அறிக்கையை உடனடியாக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத்துறை மூலம் பதிவு செய்ய வலியுறுத்துகிறேன். முதல்வர் ஸ்டாலின் காவல்துறையின் கைகளை கட்டாமல் இருந்தால் சரி.
அரசுப்பணி என்பது பல்வேறு இளைஞர்களின் கனவு. அந்தக் கனவை நனவாக்க இரவு, பகல் பாராமல் போராடிக் கொண்டிருக்கும் அவர்களின் உழைப்பை, தங்களின் கமிஷன் கொள்ளைக்காக சிதைக்கும் திமுக அரசுக்கு ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT