Published : 29 Oct 2025 06:38 PM
Last Updated : 29 Oct 2025 06:38 PM

பசும்பொன் செல்லும் முதல்வர்: மதுரை நான்கு வழிச்சாலை தூய்மைப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் மயக்கம்

மதுரை: மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்திக்கு செல்லும் தமிழக முதல்வரை வரவேற்கும் வகையில் மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் இருந்து மதுரை- ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில், அந்தந்த ஊராட்சிகள் சார்பில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் சிலைமான் ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்காததால் மயங்கினர்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்.30-ம் தேதி நடைபெறும் சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். அதனையொட்டி இன்று (அக்.29) இரவு மதுரைக்கு முதல்வர் வருகிறார். நாளை (அக்.30) காலையில் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக விரகனூர் சுற்றுச்சாலை வழியாக மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் செல்கின்றனர்.

முதல்வர் வருகையையொட்டி மாநகராட்சி சார்பில் முதல்வர் வரும் வழித்தடங்களில் சாலைகளிலுள்ள குப்பை கூளங்கள் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல், விரகனூர் சுற்றுச்சாலையில் இருந்து செல்லும் சாலையில் விரகனூர் ஊராட்சி, புளியங்குளம் ஊராட்சி, சிலைமான் ஊராட்சி ஆகிய ஊராட்சிகள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சி தலைவர்களின் பதவி காலம் முடிந்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன்படி திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் குப்பை கூளங்கள் அகற்றுவதிலும், சாலைகளை பெருக்கும் பணியிலும் சில நாட்களாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாகன போக்குவரத்துக்கு இடையே ஆபத்தான முறையில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இதில் சிலைமான் ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஊராட்சிகளில் வேலை பார்த்து விட்டு கூடுதலாகவும் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வேலை பார்த்து மயக்கம் அடைவதால் மதிய உணவு கூட ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் வாங்கித்தர மறுப்பதாக புகார் தெரிவித்தனர்.

இது குறித்து சிலைமான் ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் கூறியதாவது: முதல்வர் வருகைக்காக எங்களை நான்குவழிச் சாலையில் நான்கு நாட்களாக வேலை பார்க்கிறோம். மாதத்திற்கு ரூ.5,000 சம்பளம். வழக்கமான பணியோடு கூடுதலாகவும் வேலை பார்க்கிறோம். ஆனால் மதிய உணவு வாங்கித்தாருங்கள் எனக் கேட்டாலும் வாங்கித்தர மறுக்கின்றனர். இதனால் சோர்வுடனேயே வேலை பார்க்கிறோம். ஒரு டீயும், வடையும் வாங்கித் தருகின்றனர். அது எப்படி பசியைப் போக்கும்.

பின்னர் 4 மணிக்கு வீட்டுக்கு சென்றுதான் சாப்பிடுகிறோம். சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கிய தமிழக முதல்வருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் செயல்படுகின்றனர்” என்று ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x