Published : 29 Oct 2025 05:28 PM
Last Updated : 29 Oct 2025 05:28 PM
சென்னை: நவம்பர் 5 ஆம் தேதி தவெக சிறப்பு பொதுக்குழு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆழ்நீள் அடரமைதிக்குப் பிறகு உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது.
சூழ்ச்சியாளர்கள், சூதுமதியாளர்கள் 'துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்' அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு, நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது.
தமிழக வெற்றிக் கழகத்தின் படைக்கலன்களாக நீங்கள் இருக்கையில், நம்மைக் காக்கும் கவசமாக நம் தமிழ்நாட்டு மக்கள் இருக்கையில், அவர்களோடு நமக்குள்ள உறவை, அவர்களுக்கான குரலாகத் தொடரும் நம் வெற்றிப் பயணத்தை எவராலும் தடுக்க இயலாது. இதை, நாம் சொல்ல வேண்டியதே இல்லை. கடந்த ஒரு மாத காலமாக, தமிழக மக்களே இதை மவுன சாட்சியாக உலகிற்கு உரைத்துக் கொண்டிருக்கின்றனர். சூழ்ச்சிகளாலும், சூதுகளாலும் நம்மை வென்றுவிடலாம் என்று கனவு காணும் எதிரிகளும் இதை உணர்ந்தே உள்ளனர்.
கள நிலவரம் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கையில்தான், நமது அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும் அளந்தும் தீர்க்கமாகவும் நாம் எடுத்து வைக்க வேண்டும். இத்தகைய சூழலில், கழகத்தின் அடுத்த கட்டத் தொடர் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் ஆகவே, இவை குறித்து முடிவுகள் எடுக்கும் பொருட்டு, கழகத்தின் இதயமான பொதுக்குழுவின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளோம்.
அதன்படி, வருகிற நவம்பர் 5 ஆம் தேதி புதன்கிழமை அன்று, நம் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. வாருங்கள், சிறப்புப் பொதுக்குழுவில் கூடுவோம். வருங்காலம் நமதென்று காட்ட, தீர்க்கமாகத் திட்டமிடுவோம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT