Published : 29 Oct 2025 05:12 PM
Last Updated : 29 Oct 2025 05:12 PM

“ஊழல் வேட்கையில் இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடிய திமுக” - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

நயினார் நாகேந்திரன்

சென்னை: ஊழல் வேட்கையில் திமுக அரசு இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடியுள்ளது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணம் பெற்றுக் கொண்டு தகுதியற்ற நபர்களைப் பணியில் அமர்த்தி ரூ.888 கோடி மோசடி நடந்துள்ளது திமுக ஆட்சியில் ஊழல் வேரூன்றி இருப்பதை வெளிப்படுத்துகிறது.

கடந்த 2024-ஆம் ஆண்டு 2,538 காலிப் பணியிடங்களுக்கு 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தங்கள் சொந்த பாக்கெட்டுகளை நிரப்ப ஒரு காலிப் பணியிடத்திற்கு ரூ.35 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு, தகுதியற்ற நபர்களைப் பணியமர்த்தி, பல்லாயிரக்கணக்கான திறமையான இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துள்ளது திராவிட மாடல் அரசு.

இரு மாதங்களுக்கு முன், முதல்வர் ஸ்டாலினின் சொந்தக் கரங்களால் பணியாணை வழங்கப்பட்ட பணித்தேர்விலேயே இத்தகைய முறைகேடு நடந்திருக்கும் நிலையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் இது போன்ற எத்தனை மோசடிகள் நடந்திருக்கும் என யோசிக்கையில் மலைக்க வைக்கிறது.

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல் செய்து தமிழகத்தின் கஜானாவைக் காலி செய்தது போதாதென்று, தற்போது நேர்மையான தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி வரும் அரசின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது இன்னோரு பதிவில், “திண்டுக்கல் மாவட்டத்தில் தோல் பொருட்கள் பூங்கா, கொடைக்கானலில் மண்டலத் தோட்டக்கலை ஆய்வு மையம் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை, பழநி மற்றும் கொடைக்கானல் இடையே கேபிள் கார் வசதி ஆகியவை அமைத்துத் தரப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின்...

உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலையும் அதுசார்ந்த திண்டுக்கல் மாவட்டத்தையும் கைகழுவி விட்டுவிட்டு, உலக நாடுகளைச் சுற்றிப் பார்ப்பதில் என்ன பயன்? உள்நாட்டில் உள்ள வியாபாரத் தளங்களை மேம்படுத்துவதை விட்டுவிட்டு வெளிநாட்டு முதலீடுகளை நம்பி என்ன பயன்? மக்களை ஏமாற்றி மக்கள் வரிப்பணத்தை இப்படி சுரண்டுவதற்குப் பெயர் தான் நாடு போற்றும் நல்லாட்சியா?

ஆட்சி முடிய இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் கொடுத்த வாக்குறுதிகளில் பாதியையாவது நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமிருக்கிறதா உங்களுக்கு? தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பொய்களைப் பேசி ஊரை ஏமாற்றி, தமிழக மக்களுக்கு இப்படி நம்பிக்கைத் துரோகம் இழைப்பதற்குப் பெயர் தான் திராவிட மாடல் அரசா முதல்வரே?” எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x